15 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி! மனைவியை இழந்தவர்கள் தான் குறி.. எச்சரிக்கை செய்தி
திருமண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை தேடும் காவல்துறையினர்.
பணம், நகைகளுடன் தப்பியோடிய பெண் குறித்து அதிர்ச்சி தகவல்கள்.
முதல் மனைவியை இழந்த ஆண் ஒருவர் மறுமணம் செய்த நிலையில் அப்பெண்ணின் மிகப்பெரிய மோசடி அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தின் சேலத்தின் எடப்பாடியை சேர்ந்தவர் செந்தில் (48). இவருடைய மனைவி ரம்யா ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இதனால் மறுமணம் செய்ய முடிவு செய்த செந்தில், ஓன்லைனில் திருமண செயலி ஒன்றில் பதிவு செய்து வரன் தேடினார். இந்நிலையில் ஓன்லைன் வழியாக அவரிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட கவிதா என்ற பெண் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த ஜூன் மாதம் 24-ந் திகதி சேலம் அருகே உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
முதலிரவன்றே 4 1/2 பவுன் நகை, வெள்ளிக்கொழுசு, ரொக்கப்பணம் என 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை சுருட்டிக்கொண்டு கவிதா தப்பிச்சென்றுள்ளார்.

இது குறித்த புகாரையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் சம்பந்தப்பட்ட பெண்ணின் வங்கி கணக்கு உள்ள கோவை மருதமலை பகுதிக்குச் சென்ற பொலிசார் அங்கு அவரது வங்கி கணக்கில் இருந்த முகவரியை தேடி கோவை அருகே உள்ள களப்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு சென்றனர்.
சம்பந்தப்பட்ட முகவரியில் குடியிருந்த கவிதா கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து சென்று விட்டதாக வீட்டின் உரிமையாளர் கூறினார் இருப்பினும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து கோவை பகுதியில் முகாமிட்டு பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இது போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி திருமண ஆசை காட்டி பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட செந்தில் கூறும்போது, தனது மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற நோக்கில் ‘ஜோடி ஆப்’ மூலம் 2வது திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததாகவும், இதில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணிடம் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        