ஆடவர் அணி படுதோல்வி: அதே நாளில் நியூஸிலாந்தை பழிதீர்த்த மகளிர்படை
நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டஸ்மின் பிரிட்ஸ் அரைசதம்
ஹாமில்டனின் செட்டொன் பார்க்கில் நடந்த டி20 போட்டியில் நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதின. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீராங்கனைகள் அதிரடி ஆட்டத்தில் மிரட்டினர்.
சுனே லூஸ் 31 ஓட்டங்களில் வெளியேற, அரைசதம் அடித்த டஸ்மின் பிரிட்ஸ் (Tazmin Brits) 43 பந்துகளில் 53 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசினார்.

அதன் பின்னர் வீராங்கனை சொதப்ப, அணித்தலைவர் லௌரா வோல்வார்ட் நின்று ஆடினார். அதே சமயம் கைலா ரெய்னேக் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அவர் 9 பந்துகளில் 28 ஓட்டங்களும் (3 சிக்ஸர்கள்), வோல்வார்ட் 41 ஓட்டங்களும் எடுக்க, தென் ஆப்பிரிக்கா 177 ஓட்டங்கள் குவித்தது. ஜெஸ் கெர் மற்றும் அமெலியா கெர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

நியூஸிலாந்து ஆல்அவுட்
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீராங்கனைகள் சொதப்பினர். அணித்தலைவர் அமெலியா கெர் (Amelia Kerr) 18 பந்துகளில் 32 ஓட்டங்களும், சோபி டிவைன் 18 பந்துக்ளைல் 25 ஓட்டங்களும் விளாசினர்.
நியூசிலாந்து அணி ஒருபுறம் ஓட்டங்கள் சேர்த்தாலும், மறுபுறம் விக்கெட்டுகளை இழந்தது. 19.1வது ஓவரில் கடைசி விக்கெட்டாக ரோஸ்மேரி மைர் ரன்அவுட் ஆக, 159 ஓட்டங்களுக்கு நியூஸிலாந்து ஆல்அவுட் ஆனது.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
அபாரமாக பந்துவீசிய அயபோங்கா காகா 4 விக்கெட்டுகளும், மாபா 3 விக்கெட்டுகளும், டெர்க்சன் மற்றும் நாடின் டி கிளெர்க் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆடவர் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியுற்ற அதே நாளில் மகளிர் தென் ஆப்பிரிக்க அணி நியூஸிலாந்தை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |