ஜேர்மனியில் மீண்டும் ஒரு கத்திக்குத்து தாக்குதல்
ஜேர்மனியில் மீண்டும் ஒரு கத்திக்குத்து தாக்குதல் நடந்தேறியுள்ளது.
தடை விதிக்கப்பட்ட நபர்
கிழக்கு ஜேர்மனியிலுள்ள Saxony மாகாணத்திலுள்ள Rochlitz நகரில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் முன் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
விடயம் என்னவென்றால், 23 வயது நபரான அந்த தாக்குதல்தாரிக்கு அந்த பல்பொருள் அங்காடிக்குள் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்காடியின் வாசலில் நின்றுகொண்டிருந்த அந்த நபர், பொருட்கள் வாங்கிவிட்டு வெளியேறிக்கொண்டிருந்த ஒரு 59 வயது பெண்மணியை திடீரென கத்தியால் குத்தியுள்ளார்.
அதைக் கண்ட பக்கத்துக் கடையிலிருந்த ஒரு 18 வயது இளைஞர் அந்த பெண்ணின் உதவிக்கு வர, அவரையும் அந்த நபர் கத்தியால் குத்தியுள்ளார்.
உடனே அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் ஓடோடிவந்து அந்த நபரை மடக்கிப் பிடித்துள்ளார்கள்.
பொலிசார் வரும் வரை அவர்கள் அவரைப் பிடித்து வைத்திருக்க, பொலிசார் வந்து அவரைக் கைது செய்யும்போது முரட்டுத்தனமாக பொலிசாரை எதிர்த்துள்ளார் அவர்.
காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடைய உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
கடந்த ஆகத்து மாதம் ஜேர்மனியின் Solingen நகரில் நிகழ்த்தப்பட்ட பயங்கர கத்திக்குத்துத் தாக்குதலுக்குப் பிறகு, அத்தகைய குற்றங்கள் தொடர்பில் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், மீண்டும் ஒரு கத்திக்குத்துத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |