மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்
ஒவ்வொரு வருடமும் மார்ச் 08 ஆம் திகதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
உண்மையில் கூறப்போனால் மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு நாள் போதாது. ஏனென்றால் தன் குடும்பத்துக்காக தன்னையே தியாகம் செய்பவள்தான் பெண்.
பெண் இல்லையென்றால் இவ்வுலகில் உயிர்களே கிடையாது. உயிர்களை உலகில் உருவாக்குவது பெண் கையிலேயே உள்ளது.
அப்பேற்பட்ட பெண்கள் கையில் கரண்டியை கொடுத்துவிட்டு, புத்தகங்களை தொடக்கூடாது என்று கூறியது அந்தக் கால நடைமுறை.
ஆனால், அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு விருட்சமாய் மாறி நிற்கின்றனர் தற்கால பெண்கள்.
எங்கு பார்த்தாலும் பெண்களின் ஆதிக்கம் வரத் தொடங்கிவிட்டது. ஆணாதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில் அவர்களிடமிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் தான் மகளிர் தினம்.
பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்த காலம் போய் தற்போது விண்வெளி வரை பறக்கத் தொடங்கிவிட்டார்கள்.
எங்கெல்லாம் பெண்கள் அடிமைகளாக நடாத்தப்படுகின்றார்களோ, அங்கு தான் பெண்ணுக்கான சுதந்திரம் தேவைப்படுகின்றது.
அதன்படி கி.பி.1909இல் அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியினர் முதன் முதலாக மகளிர் தினத்தை பெப்ரவரி 28ஆம் திகதி கொண்டாடினர். அதன்பின்னர் 1917க்குப் பின்பு உலக மகளிர் அமைப்பு ஒன்று கூடி மார்ச் 08 என்ற திகதியை மகளிர் தினமாக கட்டமைத்தனர்.
வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு தொழிலுக்கும் செல்லும் பெண்கள் இரண்டையும் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்கிறார்கள் என்பதில் அவர்களின் நிர்வாகத் திறமை வெளிப்படுகிறது.
அன்னை தெரேசா, கல்பனா சாவ்லா, வேலுநாச்சியார், மேரி கியூரி என்போர் வீர பெண்மணிகளாவார். இன்னும் எத்தனையோ வீரப் பெண்மணிகள் நமக்குத் தெரியாமல் இருக்கின்றார்கள்.
எது எவ்வாறெனினும் பெண்கள் எப்பொழுதுமே நாட்டின் கண்கள். எனவே அவர்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்காமல் பார்த்துக் கொள்வது மிகப் பெரிய விடயமாகும்.
image - Unique News Online
சமூகத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் தங்கள் பங்களிப்பை முழுமையாக செலுத்தும் பெண்களுக்கு அவர்களுக்கான உரிமையும் மரியாதையும் சரியாயக் கிடைக்கின்றதா என்பது கேள்விக்குறியே.
என்னதான் பெண்கள் தங்களுக்குள் அதீத திறமைகளை கொண்டிருந்தாலும் அவர்களால் அதை வெளிக்காட்ட முடிகின்றதா என்பது அடுத்த கேள்வியாக இருக்கின்றது. பெண்கள் எப்பொழுதுமே தங்கள் வாழ்க்கையை குடும்பத்தினருக்காக மாத்திரமே செலவழிக்கின்றனர்.
அவர்கள் தங்கள் நண்பர்களுடன் நேரம் செலவழிப்பதோ, அல்லது ஷொப்பிங் செய்வதோ மிகவும் குறைவாகவே இருக்கின்றது. பத்தில் 3 பெண்கள் தான் தனக்கான சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கின்றார்கள்.
இவையெல்லாம் மாற்றம் பெற வேண்டுமானால் தினம் தினம் மகளிர் தினமாக இருந்தாலும் தவறில்லை. எது எவ்வாறெனினும் இந்த மகளிர் தினத்திலிருந்தாவது, பெண்களுக்கான சுதந்திரம் அவர்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டுமென்று வாழ்த்துவோம்.
image - Freepic