இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தைப் பாதுகாக்க கொள்கையை மாற்ற முடியாது: பிரித்தானியா திட்டவட்டம்
ஒட்டுமொத்த பிரித்தானியாவுக்கும் சாதகமான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த அணுகுமுறைக்கு மட்டுமே பிரித்தானியா ஒப்புக் கொள்ளும் என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
மாற்றும் திட்டம் இல்லை
இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைப் பாதுகாக்கும் பொருட்டு புலம்பெயர் மக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பிரித்தானியாவின் அணுகுமுறையை மாற்றும் திட்டம் இல்லை என பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
@AFP
இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இரு தரப்பும் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை ஒப்புக்கொள்கின்றன, இருப்பினும் விவாதிக்கப்பட வேண்டிய மீதமுள்ள அம்சங்கள் கடினமானவை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமது அமைச்சர்களிடம் விவாதித்த ரிஷி சுனக், பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாகவும், ஆனால் முழு பிரித்தானியாவுக்கும் சாதகமான அணுகுமுறைக்கு மட்டுமே ஒப்புக்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விவாதிக்க வாய்ப்பில்லை
கடந்த ஜூன் மாதம், வர்த்தக அமைச்சர் Kemi Badenoch தெரிவிக்கையில், வர்த்தக பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக பிரித்தானியா தற்காலிக வணிக விசாக்கள் அனுமதிப்பது குறித்து விவாதிக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
@reuters
ஆனால் இந்திய தொழிலாளர்களுக்கு பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்க வாய்ப்பில்லை என்றே தெரிவித்திருந்தார்.
தற்போதைய சூழலில் பிரித்தானியாவில் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை அதிகம் என்றே பிரதமர் ரிஷி சுனக் கருதுவதாகவும், அதனால் ஒப்பந்தத்தை காப்பாற்ற அப்படியான ஒரு முடிவுக்கு அவர் வர வாய்ப்பில்லை எனவும் செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |