புலம்பெயர்தல் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் காலகட்டத்தில் கணவர் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் பணி அனுமதி: சில பயனுள்ள தகவல்கள்
கனேடிய குடிமக்களின் வெளிநாட்டவரான கணவர் அல்லது மனைவி தங்கள் புலம்பெயர்தல் விண்ணப்பத்தின் முடிவு குறித்து அறிந்துகொள்வதற்காக காத்திருக்கும் நேரத்தில், அவர் பணி செய்வதற்காக பணி அனுமதி ஒன்றை வழங்குகிறது கனடா.
The Spousal Open Work Permit (SOWP) என்று அழைக்கப்படும் அந்த பணி அனுமதி, தங்கள் புலம்பெயர்தல் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதற்காக காத்திருக்கும் காலகட்டத்தில் ஏதாவது பணி செய்வதற்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.
அந்த பணி அனுமதியால் என்னென்ன முக்கிய நன்மைகள் என்பதை இந்தக் கட்டுரையில் அறிந்துகொள்ளலாம்.
1. காத்திருக்கும் காலகட்டத்தில் பணி செய்ய வாய்பு
இந்த கணவர் அல்லது மனைவிக்கான பணி அனுமதி, அல்லது SOWP பணி அனுமதி, கனேடியர் ஒருவரது வெளிநாட்டவரான கணவர் அல்லது மனைவி, தனது புலம்பெயர்தல் விண்ணப்பத்தின் முடிவுகளை அறிந்துகொள்வதற்காக காத்திருக்கும் காலகட்டத்தில் கனடாவில் தங்கியிருக்க அனுமதிக்கிறது.
கணவர் அல்லது மனைவிக்கான ஸ்பான்சர்ஷிப் விண்ணப்பத்தை பரிசீலிக்க, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்புக்கு 12 மாதங்கள் வரை தேவைப்படும். அந்த காலகட்டத்தில் விண்ணப்பதாரர் கனடாவில் பணி செய்ய இந்த SOWP அனுமதி உதவுகிறது.
2. எங்கு வேண்டுமானாலும் பணி செய்யலாம், தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீட்டையும் (LMIA) தவிர்க்கலாம்
இந்த SOWP அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள், கனடாவில் எங்கு வேண்டுமானாலும், என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம்.
அத்துடன், அவர்களை பணிக்கமர்த்துவோர், தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீடு பெறத் தேவையில்லை.
3. உங்கள் துணையுடன் வாழலாம்
SOWP அனுமதி அல்லது ஏதாவது ஒரு தற்காலிக நிலை இல்லையென்றால், கணவர் அல்லது மனைவி ஸ்பான்சருக்காக விண்ணப்பித்திருப்பவர்கள், கனடாவுக்கு வெளியிலிருந்தவண்ணம்தான் புலம்பெயர்தல் நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஆனால், SOWP அனுமதி உள்ளவர்கள் தங்கள் ஸ்பான்சர்ஷிப் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் காலகட்டத்தில் கனடாவில் தங்கள் துணையுடன் வாழலாம்.
4. கனேடிய பணி அனுபவம் பெறலாம்
கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கு முன்பே கனடாவில் பணி செய்த அனுபவம் பெறுவது, பின்னர் கனடாவில் உங்கள் பணியில் வளர்ச்சியடைய உதவியாக இருக்கலாம்.
உங்களுக்கு நிரந்தர வாழிட உரிமம் கிடைத்தால், நீங்கள் ஏற்கனவே சிறிது கனேடிய பணி அனுபவம் கொண்டவர் என்பதால், பிறகு அதிக ஊதியம் பெறவும் வாய்ப்பு உள்ளது.
இந்த கணவர் அல்லது மனைவிக்கான பணி அனுமதி, அல்லது SOWP பணி அனுமதியை யார் பெற முடியும்?
கணவன் அல்லது மனைவிக்கான ஸ்பான்சர்ஷிப் திட்டம் என்பது, ஏற்கனவே கனடாவில் வாழும் ஒருவரது கணவன் அல்லது மனைவிக்கானது. வெளிநாட்டவரான அந்த கணவன் அல்லது மனைவி, ஏற்கனவே கனடாவில் ஒரு பணியாளராகவோ, மாணவராகவோ அல்லது visitorஆகவோ தற்காலிக நிலை பெற்றிருக்கவேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளவும்!
இந்த கணவன் அல்லது மனைவிக்கான பணி அனுமதி, அல்லது SOWP பணி அனுமதியை ஒருவர் பெறவேண்டுமானால், ஸ்பான்சர் செய்யப்படுபவர் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்கவேண்டும்:
அவர்கள் கணவர் அல்லது மனைவி வகுப்பின் கீழ் நிரந்தர வாழிட உரிமத்துக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
அவரது கணவர் அல்லது மனைவி கனேடிய குடிமகனாகவோ அல்லது நிரந்தர வாழிட உரிமம் பெற்றவராகவோ இருக்கவேண்டும். அவர் தன் கணவர் அல்லது மனைவிக்காக ஸ்பான்சர்ஷிப் விண்ணப்பத்தை சமர்ப்பித்திருக்கவேண்டும்.
தங்களை ஸ்பான்சர் செய்த கணவர் அல்லது மனைவி வாழும் அதே முகவரியில் வாழ்பவராக இருக்கவேண்டும்.
அவர், கனடாவில் செல்லத்தக்க தற்காலிக வாழிட நிலை பெற்றிருக்கவேண்டும், அல்லது, பணி செய்யும் அங்கீகாரத்துடன் அவரது restoration status நிலை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும்.