படிப்பை கைவிட்டு மளிகை கடையில் வேலை பார்த்தவர்... இன்று அவரது தயாரிப்பை பயன்படுத்தும் 2.7 பில்லியன் மக்கள்
உக்ரைனில் பிறந்து ஏழ்மையில் இருந்து தப்ப அமெரிக்காவில் தாயாருடன் குடியேறி, மளிகை கடையில் வேலை பார்த்தவர் இன்று பல பில்லியன் டொலர் சொத்துக்கு அதிபதி.
ஏழ்மை நிலையில்
உக்ரைன் தலைநகர் Kyiv-ல் பிறந்தவர் தற்போது 47 வயதாகும் Jan Koum. யூத குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயதிலேயே கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.
தந்தை கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் தான், ஏழ்மை நிலையில் இருந்து தப்ப Jan Koum மற்றும் அவரது தாயாரும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியேறியுள்ளனர்.
ஆனால் தாயாருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட Jan Koum கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் அமெரிக்க அரசாங்க உதவிகள், உணவுக்கான ஆதரவு மற்றும் குடியிருக்க வசதி என கிடைத்தும் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய Jan Koum மளிகை கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.
வறுமை அவரை சுற்றிவளைத்திருந்தாலும், வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் தான் சைபர் பாதுகாப்பு தொடர்பான தமது திறமையை பயன்படுத்தும் வகையில் hacking குழு ஒன்றில் Jan Koum இணைந்துள்ளார்.
தொடர்ந்து Yahoo நிறுவனத்தில் இணைந்து சுமார் 9 ஆண்டுகள் பணியாற்றிய Jan Koum 2009ல் Brian Acton என்பவருடன் இணைந்து WhatsApp என்ற உலகளாவிய கவனம் ஈர்த்த தகவல் தொடர்பு தளம் ஒன்றை உருவாக்கினார்.
சுமார் 180,000 கோடிக்கு
வெறும் 5 ஆண்டுகளிலேயே உலக மக்களின் பேராதவரைப் பெற்றது. 2014ல் பேஸ்புக் நிறுவனம் 22 பில்லியன் அமெரிக்க டொலர் தொகைக்கு அந்த நிறுவனத்தை வாங்கியது. தற்போதைய இந்திய பண மதிப்பில் சுமார் 1,80,000 கோடிக்கு பேஸ்புக் நிறுவனம் WhatsApp செயலியை சொந்தமாக்கியது.
தொழில்நுட்பத்துறையில் பெரும் கோடீஸ்வரர்களான Mark Zuckerberg, Jack Dorsey மற்றும் Larry Ellison ஆகியோரின் வரிசையில் Jan Koum அறியப்பட்டாலும், இதுவரை அவர் தமது கல்லூரி படிப்பை முடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
2018 வரையில் WhatsApp நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டுள்ளார். தொழில்முறை சாதனைகளுக்கு அப்பால் Koum குடும்ப அறக்கட்டளை சார்பில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு உதவிகளை செய்துள்ளார்.
2014ல் Jan Koum-ன் சொத்துமதிப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்பட்டது. 2022ல் அது 9.8 பில்லியன் டொலராகவும், 2023ல் 13.7 பில்லியன் அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது. உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில், 140வது இடத்தில் உள்ளார் Jan Koum.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |