இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியுதவி! உலக வங்கி ஒப்புதல்
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கி அனுமதி அளித்துள்ளது.
700 மில்லியன் டொலர் நிதியுதவி
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கும் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் 700 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கியின் இயக்குநர்கள் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தொகையில், 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பட்ஜெட் உதவிக்காகவும், 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சமூகப் பாதுகாப்புக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய நிதி
கடந்த மார்ச் மாதம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர் இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய நிதி நிவாரணம் இதுவாகும்.
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் அடிப்படை சீர்திருத்தங்களை இலங்கைக்கு அமுல்படுத்தவும், ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான தற்போதைய மற்றும் எதிர்கால அதிர்ச்சிகளின் தாக்கத்தை குறைக்கவும், ஆதரவளிக்கவும் இரண்டு நடவடிக்கைகளுக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி வழங்க அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Faris Hadad-Zervos ஒரு அறிக்கையில், பொருளாதார ஸ்திரப்படுத்தல், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் நலனைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதாகக் கூறினார். இந்த சீர்திருத்தங்களை தொடர்ந்து செயல்படுத்துவது நாட்டை பசுமையான, நெகிழ்ச்சியான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி வழிநடத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |