உலகக் கிண்ணம்... விராட் கோலி அபாரம்: வங்காளதேசத்தை நொறுக்கிய இந்திய அணி
புனேவில் நடைபெற்ற 17வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதல் விக்கெட்டுக்கு 93 ஓட்டங்கள்
நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி துடுப்பாட்டம் தெரிவுசெய்தது. இதனையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டான்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
இருவரும் அரைசதம் அடித்ததுடன், முதல் விக்கெட்டுக்கு 93 ஓட்டங்கள் சேர்த்தனர். டான்சித் ஹசன் 51 ஓட்டங்களும், லிட்டன் தாஸ் 66 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹசன் சாண்டோ 8 ஓட்டங்களில் ஏமாற்றமளித்தார். தொடர்ந்து மெஹதி ஹசன் 3 ஓட்டங்களிலும், தவுஹித் ஹரிதாய் 16 ஓட்டங்களிலும் வெளியேறினர். கடைசி கட்டத்தில் முஷ்பிகுர் ரஹிம் (38) மற்றும் மகமதுல்லா (36) ஆகியோரின் பங்களிப்புடன் வங்காள அணி நல்ல ஸ்கோரை எட்டியது.
இறுதியில் வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து 257 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ஓட்டங்கள் குவித்தது.
விராட் கோலி 103 ஓட்டங்கள்
அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 48 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் அரைசதம் அடித்து 53 ஓட்டங்களில் வெளியேறினார். ஸ்ரேயஸ் ஐயர் 19 ஓட்டங்களில் வெளியேற, விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்ததுடன், ஆட்டத்தையும் வெற்றிகரமாக முடித்து வைத்தார். இந்திய அணி 41.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
விராட் கோலி 103 ஓட்டங்களுடனும், கே.எல்.ராகுல் 34 ஓட்டங்களும் எடுத்து கடைசி வரையில் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியுடன், இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவுசெய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |