உலகின் முதன் முதலில் அனுப்பப்பட்ட SMS என்ன தெரியுமா? கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஆச்சரியம்
உலகில் முதன் முதலில் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் 1,07,000 யூரோக்களுக்கு ஏலம் போயுள்ளது. உலகில் செல்போன் பயன்பாட்டுக்கு வந்த போது, அதில் எஸ்.எம்.எஸ் தான் அதிக அளவில் அனுப்பப்பட்டன.
ஆனால், தற்போது ஸ்மார்ட் போன் வந்த பிறகு வாட்ஸ் அப் போன்றவை பயன்படுத்தப்படுவதால் எஸ்.எம்.எஸ் அனுப்புவது குறைந்துவிட்டது. இந்நிலையில் உலகின் முதல் எஸ்.எம்.எஸ். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஏலம் விடப்பட்டுள்ளது.
கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் திகதி வோடபோன் என்ஜினீயர் நீல் பாப்வொர்த் என்பவர் தன்னுடைய கணினியில் இருந்து இங்கிலாந்தில் உள்ள தனது மேலாளருக்கு மெர்ரி கிறிஸ்துமஸ் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.
இது தான் உலகின் முதல் எஸ்.எம்.எஸ் ஆகும். இந்த எஸ்.எம்.எஸ் பிரித்தானியா தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோனால் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏலம் விடப்பட்டது. அப்போது, இந்த எஸ்.எம்.எஸ். 1,07,000 யூரோக்களுக்கு( இலங்கை மதிப்பில் 2,45,58,501 கோடி ரூபாய்) ஏலம் போயுள்ளது.
இது குறித்து ஏல மையத்தின் தலைவர் மாக்சிமிலியன் அகுட்டெஸ் கூறுகையில், ஆண்டு இறுதி நிகழ்வுகளின் நடுவில் இருந்ததால் என்ஜினீயர் தனது மேலாளருக்கு மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற எஸ்.எம்.எஸ்.சை அனுப்பினார்.
கண்ணுக்கு தெரியாத பொருட்களை விற்பனை செய்வது பிரான்சில் சட்டப்பூர்வமானதல்ல. இதனால் குறுஞ்செய்தியை டிஜிட்டல் சட்டகத்தில் தொகுத்து, குறியீடு மற்றும் தகவல் தொடர்பு நெறிமுறையை கடைப்பிடித்து ஏலம் விடப்பட்டதாக தெரிவித்தார்.