2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர்! இலங்கை, இந்தியா உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்பு
சமீபத்தில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிவடைந்த நிலையில் 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த நிலையில் 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் விவரம் வெளியாகியுள்ளது. 2-வது சாம்பியன்ஷிப் 2021-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை நடக்கிறது.
இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.
முந்தைய சீசனை போலவே ஒவ்வொரு அணியும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மொத்தம் 6 தொடர்களில் ஆட வேண்டும். கடந்த முறை ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் 120 புள்ளிகள் வழங்கப்பட்டது.
இந்த தடவை புள்ளி முறையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி டெஸ்ட் வெற்றிக்கு 12 புள்ளிகளும், டிராவுக்கு 4 புள்ளிகளும், ‘டை’க்கு 6 புள்ளிகளும் வழங்கப்படும். புள்ளிகள் எவ்வளவு குவித்தாலும் வெற்றி, சதவீதம் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படும்.
இறுதிப்போட்டி நடக்கும் இடம் உள்ளிட்ட விடயங்களை ஐ.சி.சி. இன்னும் முடிவு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.