உலகின் முதல் செயற்கை செல்களை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள்., இனப்பெருக்கம் செய்யும் திறன்
அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உலகின் முதல் முழுமையான செயற்கை செல்களை உருவாக்கியுள்ளனர்.
இனப்பெருக்கம் செய்யும் திறன்
SpudCell என அழைக்கப்படும் இந்த செயற்கை உயிரணு, இயற்கை செல்களைப் போலவே உணவு உண்டு, வளர்ந்து, DNA-வை நகலெடுத்து, பிரிந்து, அடுத்த தலைமுறைக்கு மரபணுவை கடத்தும் திறன் பெற்றுள்ளது.

முன்னர் நடந்த முயற்சிகள் தனித்தனி உயிரியல் செயல்பாடுகளை மட்டுமே உருவாக்கியிருந்தன. ஆனால் SpudCell பல்வேறு உயிரியல் செயல்பாடுகளை ஒரே அமைப்பில் இணைத்துள்ளது.
Liposome எனப்படும் சிறிய நீர் பந்துகளில் செயற்கை DNA சேர்த்து, தேவையான மூலக்கூறுகள், என்சைம்கள், ரைபோசோம்கள் ஆகியவற்றை வழங்கி, ஆராய்ச்சியாளர்கள் இந்த செல்களை உருவாக்கினர்.
உயிரியல் பொறியியலில் மிகப்பெரிய முன்னேற்றம்
SpudCell இயற்கை செல்களைப் போலவே இயங்கினாலும், அது முழுமையான உயிரணு அல்ல. உதாரணமாக, அது தனது சொந்த ரைபோசோம்களை உருவாக்க முடியாது; அதற்கு E. coli ரைபோசோம்கள் வழங்கப்பட வேண்டும். இருப்பினும், இது உயிரியல் பொறியியலில் மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
ஆராய்ச்சியாளர் கேட் அடமாலா கூறியதாவது: “இது உயிரணுவின் அடிப்படை செயல்பாடுகளை வேதியியல் மூலம் மீண்டும் உருவாக்கியுள்ளோம் என்பதற்கான சான்று. இதன் மூலம் வாழ்க்கையின் குறைந்தபட்ச தேவைகள் என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும்.”
இந்த கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் புதிய மருந்துகள் உருவாக்கவும், கார்பன் டைஆக்சைடை அதிக அளவில் உறிஞ்சவும், இயற்கை செல்கள் செய்ய முடியாத பல செயல்களைச் செய்யவும் உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |