உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளம்... ஏழ்மை நிலையில் தத்தளிக்கும் வெனிசுலா: என்ன காரணம்?
இயற்கை வளங்களுக்குப் பெயர் பெற்ற வெனிசுலா, தற்போது ஒரு வெடிமருந்துக் கிடங்கின் மீது அமர்ந்திருப்பது போன்ற நிலையில் அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகத்திடம் சிக்கியுள்ளது.
கருப்புத் தங்கம்
அமெரிக்கா வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மீது ஒரு சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதலை நடத்தி, ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ மற்றும் அவரது காதல் மனைவியையும் கைது செய்துள்ளது.

வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை இலக்கு வைத்தே, ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுலாவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது என பரவலாகப் பேசப்படுகிறது.
ஆனால், இந்த போர்ச் சூழலுக்கு மத்தியில் எழும் ஒரு பெரிய கேள்வியாக, உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டிருந்தும், இந்த நாடு ஏன் இவ்வளவு கையாலாகாததாகவும் ஏழ்மையானதாகவும் இருக்கிறது என்பதே.
இந்த நாடு கருப்புத் தங்கம் எனப்படும் கச்சா எண்ணெயின் மாபெரும் கடலின் மீது அமைந்துள்ளது என்று அல் ஜசீரா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், 2023ல், வெனிசுலாவில் தோராயமாக 303 பில்லியன் பீப்பாய்கள் உறுதி செய்யப்பட்ட எண்ணெய் இருப்பு இருந்தது.
இந்த அளவு என்பது சவுதி அரேபியா (267.2 பில்லியன் பீப்பாய்கள்), ஈரான் மற்றும் கனடா போன்ற பெரிய நாடுகளின் அளவை விட மிக அதிகமாகும்.
அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது, வெனிசுலாவை விட இதில் ஐந்து மடங்கு குறைவான எண்ணெய் மட்டுமே உள்ளது (55 பில்லியன் பீப்பாய்கள்).
இப்படியான எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுலா, உலகின் பணக்கார நாடாக அல்லது செல்வச்செழிப்பு மிகுந்த சவுதி அரேபியா போல இருந்திருக்க வேண்டும், ஆனால் யதார்த்தம் இதற்கு முற்றிலும் மாறாக உள்ளது.

வெனிசுலா தனது அடிப்படைத் தேவைகளுக்கே போராடி வருகிறது, மேலும் எண்ணெய் மூலம் அமெரிக்கா ஈட்டும் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே ஈட்டுகிறது.
இவ்வளவு எண்ணெய் வளம் இருந்தும் ஏன் வறுமை நிலவுகிறது எனும் கேள்வி பொதுவாகவே எழும். இதற்கான பதில் வெனிசுலாவின் புவியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அடங்கியுள்ளது.
வெனிசுலாவின் பெரும்பாலான எண்ணெய் வளம், நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஓரினோகோ பெல்ட் பகுதியில் காணப்படுகிறது. பிரச்சனை என்னவென்றால், இது கனமான கச்சா எண்ணெய். இந்த எண்ணெய் மிகவும் அடர்த்தியாகவும் பிசுபிசுப்பாகவும் இருக்கும்.
குறைந்த விலையில்
இந்த வகை எண்ணெயை பிரித்தெடுப்பதும் சுத்திகரிப்பதும் வழக்கமான எண்ணெயை விட மிகவும் கடினமானதும் அதிக செலவு பிடிக்கக்கூடியதும் ஆகும்.
அதில் கந்தகத்தின் அளவு மிக அதிகமாக உள்ளது, அதை அகற்ற மேம்பட்ட தொழில்நுட்பமும் கணிசமான முதலீடும் தேவைப்படுகிறது. மட்டுமின்றி, மற்ற நாடுகளின் கச்சா எண்ணெயுடன் ஒப்பிடும்போது, இது சர்வதேச சந்தையில் கணிசமாக குறைந்த விலையில் விற்கப்படுகிறது.

எண்ணெயின் தரம் மட்டுமே பிரச்சனை அல்ல; அரசாங்கத்தின் தவறான நிர்வாகமும் இந்தச் சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. அரசு நிறுவனமான PDVSA, நாட்டின் மொத்த எண்ணெய் நிறுவனங்களையும் கட்டுப்படுத்துகிறது.
உள்கட்டமைப்பில் பல ஆண்டுகளாக செய்யப்படாத முதலீடுகளும், காலாவதியான உபகரணங்களும் உற்பத்தித் திறனில் சரிவை ஏற்பட்டுத்தியுள்ளது.
இதனாலையே, 2023ல் சவுதி அரேபியா 181 பில்லியன் டொலர் அளவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தபோது வெனிசுலா வெறும் 4.05 பில்லியன் டொலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதேவேளை அமெரிக்கா 125 பில்லியன் டொலருக்கும் ஏற்றுமதி முன்னெடுத்துள்ளது.
தற்போது அமெரிக்காவின் நிர்வாகத்தின் கீழ் வெனிசுலா கொண்டுவரப்பட்டுள்ளதால், இந்த நிலை மாறலாம் என்றே நம்பப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |