விமானத்தில் பிரபலங்கள் செய்த மோசமான செயல்... வீடியோ வெளியானதைத் தொடர்ந்து கனேடிய அரசு அதிரடி நடவடிக்கை
கனடாவில் பிள்ளைகள் பள்ளிக்குக்கூட செல்ல இயலாமல், வர்த்தகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கனடாவிலிருந்து மெக்சிகோவுக்குச் செல்லும் விமானம் ஒன்றில் பயணித்த கனேடிய சமூக ஊடக பிரபலங்கள் செய்த செயல் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
111 Private Club என்ற குழுவைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலங்கள், டிசம்பர் 30ஆம் திகதி, கனடாவின் மொன்றியலிலிருந்து மெக்சிகோவிலுள்ள Cancun என்ற இடத்துக்கு விமானம் ஒன்றில் பயணித்துள்ளார்கள்.
அப்போது, அவர்கள் மாஸ்க் அணிவது முதலான எவ்வித விமான கட்டுப்பாடுகளையோ, கொரோனா கட்டுப்பாடுகளையோ பின்பற்றவில்லை.
அத்துடன், மது அருந்திக்கொண்டும், கஞ்சா புகைத்துக்கொண்டும் நடுவானில் ஆட்டம் போட்டுள்ளனர்.
அது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானதைத் தொடர்ந்து அரசும் மக்களும் கடும் கோபமடைந்துள்ளனர். மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலையில், கொஞ்சம் கூட சமூக அக்கறையின்றி அவர்கள் நடந்து கொண்ட விதம் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
ஆகவே, இந்த விவகாரம் குறித்து விசாரணை ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு கனேடிய போக்குவரத்துத் துறை அமைச்சரான Omar Alghabra, போக்குவரத்து ஒழுங்கு முறை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், அந்த குழுவினர் மீண்டும் இன்று மொன்றியல் திரும்ப விமானப் பயணத்திற்கு முன்பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் பயணித்த விமான நிறுவனமான Sunwing அவர்களது முன்பதிவை ரத்து செய்துள்ளது.
மேலும், அந்த விமானத்தில் பயணித்தவர்களுக்கு, ஒரு குற்றத்திற்கு 5,000 கனேடிய டொலர்கள் வீதம், 750,000 டொலர்கள் வரை அபராதமும், ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
அத்துடன், அவர்கள், மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு மில்லியன் டொலர்கள் வரை அபராதமும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.