மனைவியை கனடாவுக்கு அனுப்புவதற்காக 30 லட்ச ரூபாய் செலவிட்ட கணவன்... கனடாவுக்கு சென்றபின் மனைவி செய்த மோசமான செயல்
பொதுவாக மனைவியை கைவிட்டு விட்டு வெளிநாட்டுக்குச் சென்று குடியமரும் ஆண்களைக் குறித்துத்தான் அதிகம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், இந்தியாவில் ஒரு பெண் தன்னை கனடா அனுப்புவதற்காக 30 லட்ச ரூபாய் செலவு செய்த கணவனைக் கைவிட்டுவிட்டதாக பொலிசில் புகார் செய்யப்பட்டுள்ள வித்தியாசமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த விஷ்வாஸ் பட்டேலின் மனைவி பலக் பட்டேல், திருமணமான புதிதிலேயே கணவனிடம் கனடா செல்லும் தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். விஷ்வாஸும், மனைவியை கனடாவுக்கு அனுப்புவதற்காக சுமார் 30 லட்ச ரூபாய் வரை செலவு செய்துள்ளார். பலக் கனடா சென்றதும் விஷ்வாஸை கனடாவுக்கு அழைத்துக்கொள்வதாக, பலக்கும் அவரது பெற்றோரும் உறுதியளித்துள்ளர்கள்.
அதன்படி பலக் பட்டேல் கனடாவுக்குச் சென்றிருக்கிறார். கனடாவுக்குச் சென்றதும் அவர் தன் கணவனை கனடாவுக்கு அழைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, தான் கனடாவில் குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கைகளைத் துவங்கியிருக்கிறார்.
அதற்காக அவர் குஜராத் பொலிசாரிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் கோரி அவர் விண்ணப்பிக்க, இந்த விடயம் அவரது கணவர் குடும்பத்துக்கு தெரியவந்துள்ளது.
பலக் தங்களை ஏமாற்றிவிட்டதைப் புரிந்துகொண்ட விஷ்வாஸ் குடும்பத்தினர், பலக் கனடாவுக்கு புலம்பெயர்வதற்காக தாங்கள் பணம் செலவு செய்ததாகவும், ஆனால் கனடா சென்றதும் பலக் கணவனை அழைத்துக்கொள்ளாததோடு, தாங்கள் செலவிட்ட பணத்தையும் திருப்பித் தரவில்லை என்றும் கூறி, அவர் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக பொலிசில் புகார் செய்துள்ளனர்.
இதற்கிடையில் தடையில்லாச் சான்றிதழ் கிடைக்காததால், பலக் குஜராத் உயர்நீதிமன்றத்தில் பொலிசார் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அத்துடன், தனது தடையில்லாச் சான்றிதழ் தொடர்பாக ரொரன்றோவிலுள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பிக்க, அக்டோபர் மாதம் 29ஆம் திகதி பலக்கின் தடையில்லா சான்றிதழ் நடைமுறையை 15 நாட்களுக்குள் முடிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், 26 நாட்களாகியும் பலக் பட்டேலுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
அதற்கு பதிலாக, குஜராத் பொலிசார் பலக் மற்றும் அவரது பெற்றோர் மீது மோசடி, நம்பிக்கைத் துரோகம் மற்றும் அதற்கு துணைபோதல் ஆகிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார்கள்.
ஆனாலும் சற்றும் மனம் தளராத பலக், தனக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கும் விடயத்தில் நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக உள்ளூர் பாஸ்போர்ட் அலுவலகத்தையும், தூதரக அதிகாரியையும் தண்டிக்குமாறு உயர்நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.
அவர்கள் தனக்கு சான்றிதழ் தராதது, தனது குடியுரிமை நடைமுறையை தாமதப்படுத்தியதோடு, தன் மீது பொலிசார் புகார் பதிவு செய்யவும் காரணமாக அமைந்ததாக நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார் பலக்.
பலக்கின் புகாரை ஏற்றுக்கொண்ட நீதிமன்ற அமர்வு ஒன்று, நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக, தாங்கள் ஏன் உள்ளூர் பாஸ்போர்ட் அலுவலகம் மீதும், ரொரன்றோ தூதரக அதிகாரி மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடரக்கூடாது என்பதற்கு விளக்கமளிக்குமாறு, உள்ளூர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் ரொரன்றோ தூதரக அதிகாரிக்கும் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அத்துடன், டிசம்பர் 14ஆம் திகதிக்குள் அவர்கள் பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.