17 வயதில் கொலைப்பழி... 23 ஆண்டுகள் சிறை: தவறாக குற்றவாளியான கனேடியர்
கனடாவில் தவறாக குற்றஞ்சாட்டப்பட்டு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து பின்னர் பொதுமக்கள் பலரின் நீதிக்காக போராடிய கனேடியர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதித்துறை சட்டத்தரணி டேவிட் மில்கார்ட் என்பவரே 17 வயதில் கொலைப்பழி ஏற்று சிறைத்தண்டனை அனுபவித்தவர். 69 வயதான டேவிட் மில்கார்ட் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் ஞாயிறன்று அறிவித்துள்ளதுடன், மேலிதக தகவல்களை தெரிவிக்க மறுத்துள்ளனர்.
வின்னிபெக் பகுதியில் பிறந்த டேவிட் மில்கார்ட், கடந்த பல ஆண்டுகளாக மகள் மற்றும் மகனுடன் கல்கரி பகுதியில் வசித்து வந்துள்ளார். சாஸ்கடூன் பகுதியில் 1970ல் Gail Miller என்பவரை பலாத்காரம் செய்து கொன்றதாக கூறி டேவிட் மில்கார்ட் மீது வழக்கு பதியப்பட்டு, நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
தொடர்புடைய கொலை நடந்தபோது மில்கார்டும் அவரது இரண்டு நண்பர்களும் குறித்த பகுதி ஊடாக சாலைப் பயணத்தில் இருந்துள்ளனர். சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பின்னர், 17 வயதில், மில்லரின் கொலைக்கு தண்டனை பெற்று மில்கார்ட் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.
இதனையடுத்து மில்கார்ட் 23 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். இந்த நிலையில் 1992ல் கனேடிய உச்ச நீதிமன்றத்தில் அவரது வழக்கு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிரபராதி என தெரியவந்த பின்னர் விடுவிக்கப்பட்டார்.
மில்கார்ட் சிறையில் இருந்த காலம் முழுவதும் தாம் நிரபராதி என்பதை நிரூபிக்க போராடியபடி இருந்தார்.
சிறை மீண்ட பின்னர் பொது மேடைகளில் பேசி வந்த மில்கார்ட், கனேடிய நீதிமன்றங்கள் தண்டனைகளை மறுபரிசீலனை செய்யும் விதத்தில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என வாதிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.