வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா! மாற்று வீரரை உடனடியாக அழைத்துள்ள பிசிசிஐ
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக மாற்று வீரரை இந்திய அணி அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளதால், ஒருநாள் தொடரில் கலந்து கொள்வதற்காக, வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ருத்துராஜ் கெய்க்வாட் என ஒருநாள் அணிக்கு தேர்வாகியுள்ள வீரர்கள் சில நாட்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தனர்.
அங்கு மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மற்ற வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக, பிசிசிஐ மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ்வை தென் ஆப்பிரிக்காவிற்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.