அணுகுண்டு வீசப்பட்டால் என்ன செய்யவேண்டும்? அமெரிக்கா தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனை
ரஷ்ய உக்ரைன் போரில், அமெரிக்கா, பிரித்தானியா முதலான நாடுகள் ரஷ்யாவைத் தாக்க உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியுள்ள விடயத்தால் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
போரில் அணு ஆயுதங்கள் பிரயோகிக்கப்படலாம் என்னும் அச்சம் உருவாகியுள்ளதால், பல நாடுகள் தத்தம் குடிமக்களுக்கு அது தொடர்பில் ஆலோசனை வழங்கிவருகின்றன.
அமெரிக்கா தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனை
இந்நிலையில், அமெரிக்க பெடரல் அவசரகால மேலாண்மை ஏஜன்சி (Federal Emergency Management Agency), அணுகுண்டு வீசப்பட்டால் மக்கள் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
அணு ஆயுதங்கள் வெடிப்பதால், அந்த வெடிப்பு, வெப்பம் மற்றும் அணுக்கதிர்வீச்சால் குறிப்பிடத்தக்க அளவில் சேதம் ஏற்படும் என்றும், ஆனாலும், அதிலிருந்து உங்கள் குடும்பத்தினரை பாதுகாக்கமுடியும் என்றும் FEMA ஏஜன்சி தெரிவித்துள்ளது.
அணுகுண்டு வீசப்பட்டால் என்ன செய்யவேண்டும்?
அணுகுண்டு வீசப்பட்டால், வீடுகளுக்குள்ளேயே இருங்கள், ஜன்னல்களை விட்டு தூரமாக, அறையின் நடுப்பகுதியில், முடிந்தால் வீட்டின் அடித்தளத்தில் இருங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை, குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.
அருகிலுள்ள குடும்ப உறுப்பினர்களை சந்திக்க புறப்பட்டால், அணுக்கதிர் வீச்சின் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
ஒருவேளை துரதிர்ஷ்டவசமாக நீங்கள் அணுகுண்டு வெடிக்கும் நேரத்தில் வீட்டுக்கு வெளியே மாட்டிக்கொள்ள நேர்ந்தால், அருகிலுள்ள பாதுகாப்பான இடம் ஒன்றிற்குச் சென்று முகம் குப்புற தரையில் படுத்துக்கொள்ளுங்கள்.
ஒருவேளை நீங்கள் காருக்குள் இருந்தால், பொதுவாக அது பாதுகாப்பானதல்ல, என்றாலும், காரின் டேஷ்போர்டுக்குக் கீழே சுருண்டு பதுங்கிக்கொள்ளுங்கள்.