தோழியின் ஆடை முகத்தில் பட்டதால் பதற்றமடைந்த யாஷிகா! சீட் பெல்ட் அணியவில்லை... விபத்தின் திக் திக் நிமிடங்களின் முழு பின்னணி
நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளானதன் முழு பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2வது சீசன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
ஆந்திரத் தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் 28 வயதான வள்ளிசெட்டி பவானி. இவர் யாஷிகாவின் தோழி. அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தோழியைப் பார்ப்பதற்காக கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார்.
நடிகை யாஷிகா, பவானி, ஆண் நண்பர்கள் சையது, அமீர் ஆகியோர் சனிக்கிழமை அன்று சென்னையில் இருந்து காரில் புதுச்சேரி சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து இரவு 10 மணியளவில் காரில் புறப்பட்டு சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். யாஷிகா கார் ஓட்ட, முன்பக்கத்தில் வள்ளிசெட்டி பவானியும் பின் இருக்கைகளில் ஆண் நண்பர்களும் இருந்தனர்.
நள்ளிரவு 12 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்த போது, மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில், திடீரென கார் நிலைதடுமாறி, சாலைத் தடுப்பில் மோதி பல முறை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி, பவானி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்து பலியானார். யாஷிகாவிற்கு கை, கால், இடுப்பு எலும்புகளில் முறிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. காரின் பின் இருக்கைகளில் இருந்த ஆண் நண்பர்கள் சிறிய காயங்களுடன் தப்பி விட்டனர்.
பொலிஸ் விசாரணையில் விபத்திற்கான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. யாஷிகா ஓட்டி வந்த கார், டாடா ஹேரியர் வகையைச் சேர்ந்தது.
இதன் கூரையில் ஒரு திறப்பு இருக்கும். யாஷிகா, மணிக்கு 140 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி வந்ததாக பொலிசார் கூறுகின்றனர். அதேநேரம் காருக்குள் சத்தமாக பாடல்களை ஒலிக்க விட்டு 4 பேரும் கூச்சலிட்டபடி ஓட்டி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில்தான், முன் இருக்கையில் அமர்ந்திருந்த தோழி வள்ளிசெட்டி பவானி, கூரையில் இருந்த திறப்பைத் திறந்து இருக்கையில் ஏறி நின்று கொண்டார். மேலும் பாடல்களுக்கு ஏற்ப அவர் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது.
அப்போது அவரது ஆடை, யாஷிகாவின் முகத்தில் பட்டு கண்களை மறைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. பதற்றமடைந்த யாஷிகாவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய கார், முதலில் இடது பக்கம் சாலையோரம் உள்ள இரும்புத் தடுப்புகளில் மோதியுள்ளது.
சுதாரித்த யாஷிகா, விபத்தை தடுக்கும் முயற்சியாக காரை வலது பக்கம் திருப்பவே அதிவேகத்தில் சாலைத் தடுப்பில் மோதி பலமுறை கார் உருண்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
அதேநேரம் காரின் திறப்பில் பவானி நின்று கொண்டு வந்ததால் மோதிய வேகத்தில் அவர் காரை விட்டு வெளியே துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்கின்றனர்.
பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆண் நண்பர்கள் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் பல முறை கார் உருண்டும் சிறிய காயங்களுடன் தப்பி விட்டனர்.
அதேநேரம் யாஷிகாவும் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டி வந்ததால் அவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.