பிரித்தானியாவில் தீ கோளமான ஹெலிகொப்டர்: உடல் கருகி பலியான பயணிகள்
பிரித்தானியாவின் யார்க்ஷயர் பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்தில் சிக்கி தீ கோளமான சம்பவத்தில் இருவர் உடல் கருகி பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
யார்க்ஷயர் டேல்ஸில் உள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் மூன்று பேர் வரை இருந்திருக்கலாம் என்று முன்னர் கருதப்பட்டது. ஆனால், முதற்கட்ட விசாரணையை அடுத்து இந்த பயங்கர சம்பவத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்ததை வடக்கு யார்க்ஷயர் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இங்கிள்டன் அருகே ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து முழு விசாரணை நடைபெற்று வருவதாக வடக்கு யார்க்ஷயர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு சிறப்பு அதிகாரிகள் உளவியல் உதவி அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் தகவல் தெரியவர, தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், பொலிசார் மற்றும் யார்க்ஷயர் ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சேவைகள் விரைந்தன.
வயல்வெளியில் நெருப்பு கோளமாக விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர் விபத்து அப்பகுதி மக்களை உலுக்கியதாக கூறப்படுகிறது. முதலில் விமானி உயிர் தப்பியிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், விமானியுடன் அதில் பயணித்த இருவரும் உடல் கருகி பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.