பிரதான மந்திரி முத்ரா திட்டம்- சொந்த தொழிலில் கை நிறைய சம்பாதிக்கலாம்
குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெரும் சொந்த தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மத்திய அரசின் கடன் உதவி
தற்போதைய சூழலில் ஒரு நிறுவனத்திற்கு சென்று வேலை செய்வதற்கு பதிலாக சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று தான்இளைஞர்கள் ஆசைப்படுகிறார்கள்.
இதற்காக, மத்திய மாநில அரசுகள் தொழில் தொடங்குவதற்கு பல நிதியுதவி திட்டங்கள் கொண்டு வந்துள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா?
அதில் ஒன்று தான் பிரதான மந்திரி முத்ரா திட்டம்.
இந்த திட்டமானது மத்திய அரசின் உத்தரவாதம் மூலம் எந்தவொரு அடமானமும் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை நாம் கடன் பெற முடியும்.
மத்திய அரசின் மூலம் கடனுதவி கிடைத்து குறைந்த முதலீட்டில் சொந்த தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது நிச்சயம் கை கொடுக்கும்.
குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும்.
தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும்.
பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழிலுக்கு சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பொதுவுடைமை வங்கிகள், தேசிய வங்கிகள் மட்டும் மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்த கடன் வழங்கப்படுகிறது.
இந்த முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்திக் கொள்ளவும் கடன்களை வழங்குகிறது.
இது சிசு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய முறைகளில் வழங்கப்படுகிறது.
சிசு (SHISHU) – இத்திட்டம் மூலமாக Rs. 50000 வரை கடன் பெறலாம்.
கிஷோர் (KISHOR) – இத்திட்டம் மூலமாக Rs. 50000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெறலாம்.
தருண் (TARUN) - இத்திட்டம் மூலமாக ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை கடன் பெறலாம்.
இத்திட்டத்தில் யார் பயன் பெறலாம்?
அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
கடன் பணமாக கிடைக்காது. பொருள், இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி என அனைத்திற்கும் அதன் விற்பனையாளரின் விலைபட்டியல் (Quotation) கொடுக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் கடன் கிடைக்கும். உங்களின் சரியான தொழில் கடன் தேவையை நீங்கள் நிரூபிக்கும் பட்சத்தில் கடன் வழங்க வங்கி மேலாளர் இறுதி முடிவு எடுப்பார்.
சொந்த செலவு, வீட்டு செலவு, கல்யாண செலவு போன்றவற்றிக்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்க வாய்ப்பில்லை. கல்வி கடன் தனிநபர் கடன் தனிநபர் வாகன கடன் இதில் வராது.
நீங்கள் செய்ய வேண்டியவை
இதில் கடன் பெற உங்கள் அருகில் உள்ள வங்கிக் கிளைக்கு சென்று விண்ணப்பப் படிவம் பெறலாம்.
மேலும் PMMY APPLICATION FORM என்ற இணையத்தின் மூலமாகவும் உங்கள் வங்கிகளுக்கு ஏற்ப விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.
வயது வரம்பு 18 வயது முடிந்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் மூன்று பிரிவுகளில் கடன் பெறலாம். அதற்கான தகுதியை வங்கி மேலாளர் உங்கள் தொழிலைக் கொண்டு முடிவு செய்வார்.
இத்திட்டத்தில் எந்தவித அரசு மானியமும் கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு தொழில் கடன் திட்டம் மட்டுமே.
இந்த வகை கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயிக்கப்படும். நீங்கள் வாங்கும் கடனை 5 வருடம் வரை திருப்பி செலுத்தலாம்.
கடனை EMI மூலம் வங்கி கணக்கிட்டு அறிவிக்கும். நீங்கள் கடனை சரியாக திரும்ப செலுத்தும் பட்சத்தில், தொழில் நன்றாக நடக்கும் போது மேற்கொண்டு அதனை அபிவிருத்தி அல்லது நடைமுறை மூலதனம் பெற வங்கிகள் தொடர்ந்து கடன் வழங்கும்.
ஏற்கனவே தொழில் நடத்துவதற்கும் இக்கடன் திட்டம் உண்டு. ஆனால் அவர்களின் மீது எந்த வங்கியிலும் வாராக் கடன் அல்லது செக் ரிட்டன் கணக்காக இருக்கக் கூடாது.
இந்த கடனை பெற எந்தவித சொத்து பிணையம் (SECURITY) மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை.
கடன் பத்து லட்சம் வரை பெறலாம். ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு 25 குறைந்த பட்சம் நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும்.
அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம். உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது.
அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம். உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே முயற்சிக்கவும்.
விலைப் பட்டியலுடன் நீங்கள் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க கடன் பெறலாம். இந்த கடன் திட்டத்திற்கு கால நிர்ணயம் இல்லை, வருடம் முழுவதும் வங்கிகள் கடன் வழங்கும்.
Source- Vikaspedia
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |