30 வயதில் திடீர் ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீராங்கனை!
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அனியா ஸ்ருப்சோல் 30 வயதில் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்த அனியா ஸ்ருப்சோல், கடந்த 14 ஆண்டுகளாக தனது நாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்த முடிந்ததை பெரும் பாக்கியமாக உணர்வதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'பெண்கள் கிரிக்கெட் வளர்ந்து வரும் நேரத்தில் அணியில் பங்கெடுத்தது பெருமையாக உள்ளது. ஆனால் அது என்னால் தொடரக்கூடியதை விட வேகமாக இந்த கிரிக்கெட் முன்னேறுகிறது என்பது எனக்கு தெளிவாகிவிட்டது, எனவே நான் விலகிச் செல்ல வேண்டிய நேரம் இது.
இவ்வளவு காலம் இங்கிலாந்துக்காக விளையாடும் அளவுக்கு அதிர்ஷ்டசாலி என்று எனது கனவில் நினைத்ததில்லை, ஒரு ஆட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். வழியில் பல ஏற்ற தாழ்வுகள் இருந்தன' என தெரிவித்துள்ளார்.
இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியிருக்கும் ஸ்ருப்சோல், 2017ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக 46 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
86 ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் ஸ்ருப்சோல், 79 டி20 போட்டிகளில் 102 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என ஸ்ருப்சோல் குறிப்பிட்டுள்ளார்.