34 லட்சம் பண மோசடி..!திருமணம் செய்து கொள்வதாக மருத்துவரை ஏமாற்றிய இளம்பெண்
அமெரிக்காவை சேர்ந்த பெண் என்றும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி புதுச்சேரி மருத்துவரிடம் இருந்து 34 லட்சம் ரூபாயை மோசடி செய்த இளம்பெண்ணை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இளம் பெண்ணின் ஆசை வார்த்தையில் மயங்கிய புதுச்சேரி மருத்துவர்
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் பாலாஜி, திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கு 2வது திருமணம் செய்து வைக்கும் நோக்கத்தில், அவரது குடும்பத்தினர் பாலாஜியின் சுயவிவரங்களை திருமண தகவல் இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.
இதையடுத்து அமெரிக்காவை சேர்ந்தவர் என்று சோமஶ்ரீ நாயக் என்ற பெண் மருத்துவர் பாலாஜிக்கு அறிமுகமாகியுள்ளார்.
அத்துடன் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து முடித்துவிட்டு தற்போது சிரியாவில் வேலை பார்த்து வருவதாகவும் சோமஶ்ரீ நாயக் தெரிவித்துள்ளார்.
பின் வாட்ஸ் அப் மூலம் இருவரும் தொடர்ந்து பேச தொடங்கவே சோமஶ்ரீ நாயக் பேச்சில் பாலாஜி மயங்கியுள்ளார், மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
34 லட்சம் மோசடி
இந்நிலையில் சோமஶ்ரீ நாயக் தனக்கு பணத் தேவை இருப்பதாக கூறி டாக்டர் பாலாஜியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 34 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார்.
இதன் பிறகு இளம் பெண் சோமஶ்ரீ நாயக் சிறிது சிறிதாக பாலாஜியிடம் பேச்சை தவிர்க்க தொடங்கிள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பாலாஜி சோமஶ்ரீ நாயக்-யிடம் அவரது டாக்டர் பதிவு எண்னை கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு சோமஶ்ரீ நாயக் பதில் எதுவும் வழங்காமல் தன்னுடைய மொத்த தொடர்பையும் துண்டித்துள்ளார்.
அப்போது தான், தாம் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்து பாலாஜி புதுச்சேரி சைபர் கிரைம் காவலதுறையிடம் புகார் அளித்துள்ளார்.
தற்போது டாக்டர் பாலாஜி வழங்கிய தகவலின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.