சகோதரனை காப்பாற்ற சென்ற இளம் பெண்... கும்பலால் துஸ்பிரயோகம்: நள்ளிரவில் அதிர்ச்சி சம்பவம்
இந்திய தலைநகர் டெல்லியில் சகோதரனிடம் தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்க சென்ற போது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மூன்று இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் கடந்த வியாழக்கிழமை இரவு மூன்று முதல் 4 பேர் கொண்ட கும்பல், பெண் ஒருவரை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், அவருடைய ஆடைகளை கிழித்துவிட்டதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்தனர்.
அப்போது, தன்னுடைய சகோதரனிடம் காரில் வந்த 3 பேர் பிரச்னையில் ஈடுபட்டதால் அங்கு வந்த போது அந்த 3 பேரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக அந்த பெண் காவலர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக ஃபாதேபுர் பேரி காவல்நிலையத்தில் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து காவல்துறைக்கு வந்த மற்றொரு தொலைபேசி அழைப்பில் அய நகர் பகுதியில் 3 பேர் தன்னை தாக்கி, தன்னிடம் இருந்து 30,000 ரூபாய் பறித்துச் சென்றதாக ஒருவர் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு காவலர்கள் சென்ற போது ஷாஜத் (30) என்ற ட்ரக் ஓட்டுநர் பொலிசாரிடம், நானும், சக தொழிலாளிகளிடம் லாரியில் இருந்து செங்கற்களை இறக்கிக் கொண்டிருந்தோம், அப்போது அங்கு வந்த 3 பேர் எங்களிடம் தகராறு செய்ததுடன் எங்களை தாக்கினர்.
பின்னர் என்னிடம் இருந்த பணப்பையை பறித்துச் சென்றனர். அதில் 30,000 ரூபாய் பணமும், சில ஆவணங்களும் இருந்ததாக அவர் கூறினார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், இரண்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் ஒரே கும்பல் தான் என தெரியவந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை காட்டுப்பகுதியில் பதுக்கியிருந்த அய நகர் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் (26), நவீன் லஹ்மோத் (25) மற்றும் பல்ஜீத் (30) ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 5200 ரூபாய் பணமும், கார் ஒன்றும், சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.