இரவுநேர பணி முடிந்து திரும்பிய தோழிகள்.. 23 வயதில் பரிதாபமாக பறிபோன உயிர்கள்..தமிழகத்தில் நடந்த சம்பவம்
மதுபோதையில் கார் ஒட்டிய இளைஞரால் பலியான இளம்பெண்கள்
இரவு பணி முடித்துவிட்டு திரும்பிய தோழிகள் ஒன்றாக உயிரிழந்த பரிதாபம்
சென்னையில் இரவில் நடந்த சாலை விபத்தில் இரண்டு இளம்பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் அக்காததாரா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி (23), ஆந்திராவின் ரெட்டிகாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த லாவண்யா (23) ஆகிய இருவரும் சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர்.
நெருங்கிய தோழிகளான இருவரும் கடந்த 14ஆம் திகதி இரவுநேர பணியை முடித்துவிட்டு, அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் இளம்பெண்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனை நேரில் பார்த்தவர்கள் உதவியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஸ்ரீலட்சுமி, லாவண்யா இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு ஸ்ரீலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்ற லாவண்யாவும் இறந்துவிட்டார்.
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய காரை பொதுமக்கள் பிடித்து, அதன் ஓட்டுநரான இளைஞரை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் மோத்தீஷ்குமார் (20) என்பதும், மதுபோதையில் காரை வேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.