வேகமாக வந்துகொண்டிருந்த ரயில் முன் குதித்த இளைஞர்: பொலிசார் ஒருவர் செய்த துணிச்சலான செயல்
இந்தியாவில், வேகமாக வந்துகொண்டிருந்த ரயில் முன் திடீரென இளைஞர் ஒருவர் குதிக்க, பொலிசார் ஒருவர் துணிந்து தண்டவாளத்தில் குதித்து அந்த இளைஞரைக் காப்பாற்றுவதைக் காட்டும் திகில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
மஹாராஷ்ட்ராவிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில், ஒரு இளைஞர் பிளாட்பாரத்தின் ஓரமாக நிற்பதைக் கவனித்த பொலிசார் ஒருவர், அவரை விலகி நிற்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஆனாலும் அந்த இளைஞர் பிளாட்பாரத்தின் ஓரத்திலேயே நிற்க, மீண்டும் அவரை விலகி வருமாறு அறிவுறுத்தியுள்ளார் அந்த பொலிசார்.
ஆனால், வேகமாக ரயில் வரும் நேரத்தில், அந்த இளைஞர் சட்டென ரயில் தண்டவாளத்தில் குதித்துவிட்டார்.
அதைக் கவனித்த அந்த பொலிசார், சட்டென தானும் தண்டவாளத்தில் குதித்து, அந்த இளைஞரை தண்டவாளத்துக்கு வெளியே தள்ளிவிட்டு விட்டு, தானும் தண்டவாளத்திலிருந்து வெளியேறிவிட்டார். இருவரும் தண்டவாளத்திலிருந்து வெளியேறிய சில விநாடிகளுக்குள் ரயில் வந்துவிட, இந்த அதிர்ச்சியளிக்கும் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த பிளாட்பாரத்தில் காத்திருந்த மற்ற பயணிகள் பதறிப்போனார்கள்.
பின்னர் பொலிசாரால் காப்பாற்றப்பட்ட அந்த இளைஞரின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அந்த பொலிசார் துணிச்சலாக ரயில் தண்டவாளத்தில் குதித்து அந்த இளைஞரைக் காப்பாற்றும் காட்சியைக் காட்டும் வீடியோ வைரலாகியுள்ளது.
304,000 பேர் அந்த வீடியோவைப் பார்வையிட்டுள்ளதுடன், ஏராளமானோர் அந்த பொலிசாரைப் பாராட்டி வருகிறார்கள்.