திடீரென இளம்பெண்ணின் காரில் ஏறிய நபர் செய்த மோசமான செயல்: வாழ்வு துவங்கும் நேரத்தில் நிகழ்ந்த பரிதாபம்
கனடாவில், படிப்பை முடிந்து சொந்தமாக தொழில் ஒன்றைத் துவக்கும் ஆசையிலிருந்த ஒரு இளம்பெண்ணின் கனவு, சம்பந்தமே இல்லாத ஒருவரால் துவங்கும் முன்பே முடிந்துபோனது.
Manitobaவைச் சேர்ந்த Brittany Bung (19) உணவகம் ஒன்றில் வேலை செய்துவந்தார். சமையல் கலை பயின்று, சொந்தமாக காபி ஷாப் ஒன்றைத் துவங்குவதுதான் அவரது கனவு.
அன்று வேலைக்கு புறப்பட்ட Brittany, பெட்ரோல் நிரப்புவதற்காக தனது காரை பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தியுள்ளார். அப்போது, அங்கு சட்டை அணியாத இளைஞர் ஒருவர் பெட்ரோல் நிலைய ஊழியர்களிடம் தகராறு செய்துகொண்டிருந்திருக்கிறார்.
Brittanyயின் காரைக் கண்டதும், சட்டென அவரது காரில் ஏறிய அந்த இளைஞர், கத்தியைக் காட்டி மிரட்டி காரை கிளப்பச் சொல்ல, பயந்துபோன Brittanyயும் காரைக் கிளப்பியிருக்கிறார். சற்று தூரம் சென்றதும், திடீரென அந்த இளைஞர் Brittanyயை சரமாரியாக கத்தியால் குத்தியிருக்கிறார்.
முகம், கழுத்து, மார்பு என பல இடங்களில் கத்திக்குத்து விழ, கைகளால் தடுக்கும்போது, கைகளிலும் பல கத்திக்குத்துகள் விழுந்துள்ளன Brittanyக்கு. படுகாயமடைந்த நிலையிலும், காரிலிருந்து இறங்கிய Brittany அவசர உதவியை அழைத்துள்ளார்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டிருக்கிறது. இதற்கிடையில், Brittanyயை கத்தியால் குத்திய இளைஞர் பெயர் Jordan Belyk (24) என்று தெரியவந்துள்ளது. 12 வயதில் தன் கண் முன்னே தன் தாய் கொல்லப்பட்டதைக் கண்ட Jordan, கடுமையான போதைக்கு அடிமையாகியிருக்கிறார்.
தன்னுடைய போதையால் ஒரு உயிர் பரிதாபமாக பலியாகிவிட்டதை அறிந்து, தான் வருந்துவதாக தெரிவித்துள்ளார் Jordan.
ஆனால், அவரது வருத்தம், போன உயிரை திரும்பக் கொண்டு வந்துவிடுமா என்ன? வழக்கு தொடர்கிறது, அவருக்கு 12 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்குமாறு சட்டத்தரணிகள் கோரியுள்ளார்கள். தீர்ப்பை, மே மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார் நீதிபதி.