தங்கையை காதலித்த நபரை வெட்டிக்கொன்ற அண்ணன்!
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் தனது தங்கையை காதலித்த இளைஞரை கொடூரமாக கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே சேடப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பழனிச்சாமியின் மகன் அழகுவிஜய்(23).
கூலித் தொழிலாளியான இவர், பக்கத்துத் தெருவில் வசிக்கும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவியை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் மாணவியின் தந்தை தமிழ்ச்செல்வன், அண்ணன் அஜித்குமார் (26) உட்பட பலருக்கும் தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, இரு வீட்டாரும் தங்கள் பிள்ளைகளை இரண்டு முறை கண்டித்துள்ளனர். ஆனாலும், குறித்த மாணவி காதலில் பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சேடப்பட்டியில் உள்ள மக்கள் பலரும் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அழகுவிஜய் தனது காதலியை காண அவரது வெற்றிக்கு சென்றுள்ளார். திடீரென அங்கு வந்த அஜித்குமார் இளைஞர் அழகுவிஜயை சரமாரியாக தாக்கியுள்ளார்.
பின்னர் தடுக்க வந்த தங்கையை ஓர் அறையில் அடைத்து வைத்துவிட்டு, தோட்டத்துப் பகுதிக்கு அழகுவிஜயை தூக்கிச்சென்று அவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து தனது தந்தையை சம்பவ இடத்திற்கு வரவழைத்த அஜித்குமார், அவருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் அழகுவிஜய்யின் உடலை மூட்டைக்கட்டி, வெகுதொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் போட்டுள்ளார்.
அதன் பின்னர் அங்கிருந்து அஜித்குமார் தப்பிவிட, தந்தை தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் சாலையில் ரத்தம் சிந்திக் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அத்துடன் அழகுவிஜயை காணவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனால் சந்தேகமடைந்த பொலிசார் தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். உடனடியாக அவரை கைது செய்த பொலிசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அழகுவிஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.