சுவிஸில் ஒரு குடியிருப்பு வாசலில் குற்றுயிராக கிடந்த இளைஞர்: பொதுமக்கள் உதவி கோரும் பொலிஸ்
சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் ஒரு குடியிருப்பு வாசலில் இளைஞர் ஒருவரை குற்றுயிராக மீட்ட நிலையில், பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
பாஸல் மண்டலத்தின் Morgartenring டிராம் நிறுத்தமருகே அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றின் வாசல் அருகே அந்த இளைஞரை வழி போக்கர்கள் இருவர் கண்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில், அந்த இளைஞரின் அருகே நின்றிருந்த ஒரு நபர், அது வழியாக சென்றவர்களிடம் அரைகுறை ஜேர்மன் மொழியில் உதவி கோரியுள்ளார்.
இதில் மனமிரங்கிய இருவர் அந்த இளைஞருக்கு உதவ முன்வந்த நிலையில், உதவி கேட்ட அந்த அரைகுறை ஜேர்மன் மொழி பேசிய நபர், அங்கிருந்து டிராம் வண்டி ஒன்றில் ஏறி மாயமாகியுள்ளார்.
இருப்பினும், அந்த வழி போக்கர்கள் இருவர் அந்த இளைஞருக்கு முதலுதவி செய்ததுடன், பொலிசாருக்கும் அவசர உதவிக் குழுவினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
முகம் முழுவதும் காயங்களுடன் குற்றுயிராக கிடந்த அந்த இளைஞருக்கு 16 வயதிருக்கும் எனவும், தற்போது அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனை அவசர பிரிவில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.
அந்த இளைஞருக்கு என்ன நடந்தது, எவ்வளவு நேரம் அந்த இளைஞன் வீட்டு நுழைவாயிலின் முன் படுத்திருந்தான் என்பதை இதுவரை தெளிவுபடுத்த முடியவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை அணுக வேண்டும் என்ற கோரிக்கை தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.