கனேடிய மாகாணம் ஒன்றிலிருந்து வெளியேறும் இளைஞர்கள்: காரணம் என்ன?
கனேடிய மாகாணமாக ஆல்பர்ட்டாவில் பணியிடங்கள் ஏராளம் காலியாக இருந்தும், இளைஞர்கள் பலர் அந்த மாகாணத்திலிருந்து வெளியேறி வருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ஒரு காலத்தில் ஆல்பர்ட்டாவைத் தேடி இளைஞர்கள் ஏராளம் வருவார்கள், இப்போது அவர்கள் வெளியேறுகிறார்கள். அதுவும் சிலர் ஆர்வத்துடன் ஆல்பர்ட்டாவை விட்டு வெளியேறிவருகிறார்கள் என்கிறார் அந்த ஆய்வறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான Janet Lane.
அவர் சொல்வது போலவே, பல ஆண்டுகளாக ஆல்பர்ட்டாவை நோக்கி இளைஞர் கூட்டம் படையெடுத்துவந்தது. அதற்குக் காரணம் அங்குள்ள எண்ணெய் நிறுவனங்கள்.
ஆனால், 2016க்குப் பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. 15 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள், அந்த ஆண்டு முதல் ஆல்பர்ட்டாவை விட்டு வெளியேறத் துவங்கினார்கள்.
இப்போதோ, ஆல்பர்ட்டாவில் பன்முகத்தன்மை கொண்ட பொருளாதாரம் இல்லை, எண்ணெய் நிறுவனத்தில் மட்டுமே அங்கு வேலை வாய்ப்பு உள்ளது என அவர்கள் கருதுகிறார்கள்.
வெவ்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் வேண்டும் என அவர்கள் கருதுவதோடு, பொதுப்போக்குவரத்து, துப்புறவு, பாதுகாப்பு முதலான விடயங்களும் அவர்கள் வெளியேறுவதற்கான காரணங்களில் இடம்பெறுகின்றன.
தொழிநுட்பத்துறை வளர்கிறது, வீட்டு வசதி எளிதில் கிடைக்கிறது, பூங்காக்கள் முதலான பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தும், ஆல்பர்ட்டாவில் துடிப்பும் பன்முகத்தன்மையும் இல்லை என கருதுகிறார்கள் இளைஞர்கள்.
எல்லாவற்றிற்கும் மேல், ஆல்பர்ட்டாவில் பழமைவாதமும் சகிப்புத்தன்மையின்மையும் காணப்படுவதாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.