ஆளை மாற்றி திருநங்கையை கொலை செய்த இளைஞர்.., கோயம்புத்த்தூரில் பரபரப்பு
கோயம்புத்தூரில் ஆளை மாற்றி திருநங்கையை கொலை செய்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது?
தமிழக மாவட்டமான நீலகிரி, குன்னூர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி என்கிற சோமசுந்தரம் (37). இவர் ஒரு ஐ.டி ஊழியர். இந்நிலையில், இவர் கோவை வடவள்ளி அடுத்த மருதமலை இந்திரா நகர் பகுதியில் உள்ள மாசிலாமணி (33) என்ற திருநங்கை வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார். மேலும், தனலட்சுமி, மாசிலாமணி, மணி ஆகிய மூவரும் நண்பர்களாக உள்ளனர்.
கடந்த 30 -ம் திகதி மாசிலாமணி வீட்டிற்கு தனலட்சுமி சென்றுள்ளார். அப்போது, மாசிலாமணி மற்றும் மணி இருவரும் மாலை 4 மணிக்கு வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிய போது தனலட்சுமி உடல் முழுவதும் காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார்.
ஆள் மாற்றிக் கொலை
பின்னர், இதுகுறித்து வடவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அந்த விசாரணையில், "சென்னையை சேர்ந்த ஐ.டி.ஊழியர் தினேஷ், மருதமலைக்கு வந்த போது சிலர் அவரிடம் பணத்தை பறித்து சென்ற விவகாரத்தில் தினேஷை மாசிலாமணி தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது ஆத்திரமடைந்த தினேஷ் மாசிலாமணியை கொல்வதற்காக கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்துள்ளார். அப்போது அவர் வீட்டில் இல்லாததால் திரும்பி சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, கடந்த 29 -ம் திகதி கோவைக்கு வந்த தினேஷ், கத்தியை எடுத்துக் கொண்டு மாசிலாமணி வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது படுத்திருந்த தனலட்சுமியை மாசிலாமணி என நினைத்து குத்தி கொலை செய்துள்ளார். பின்பு மொட்டை அடித்துக் கொண்டு தினேஷ் திரும்ப சென்றுள்ளார்" என்பது தெரியவந்தது.
பின்னர், தினேஷை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |