கமல் ஹாசன் குறித்து யூடியூபில் அவதூறு: நாம் தமிழர் கட்சி உறுப்பினர் மீது புகார்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக கூறி, அக்கட்சியின் உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் மீது புகார் அளித்துள்ளனர்.
கமல் குறித்து அவதூறு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தெற்கு நகர செயலாளர் தாஜூதீன் தலைமையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சாட்டை துரைமுருகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "நாம் தமிழர் கட்சி மாநில பொறுப்பில் இருக்கும் துரைமுருகன் என்பவர் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தை வருகிறார். அவர் மக்கள் நீதி மய்யம் கட்சி பற்றியும், கமல் ஹாசன் குறித்தும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை யூடியூபில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
மேலும், கமல் ஹாசன் ஒரு கன்னடர். அவருக்கு கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற இடம் தான் பூர்வீகம் என்று பொய்யான தகவலை பரப்புகிறார்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
யூடியூப் சேனலின் கருத்துக்களை நீக்குக
அதுமட்டுமல்லாமல், எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் நடிகர் கமல் ஹாசன் பற்றி தவறான கருத்துக்களை கூறி, அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி மாநில பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் செயல்பட்டு வருகிறார்.
இதனால், யூடியூப் சேனலில் இருந்து கமல் ஹாசன் குறித்த தவறான கருத்துக்ளை அகற்ற வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் பேசிய சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |