21,000 கோடி வருவாய் ஈட்டிய இந்திய யூடியூபர்கள்! நீதா அம்பானி வெளியிட்ட அறிவிப்பு
இந்தியாவில் யூடியூப் மூலம் 21,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக சிஇஓ நீல் மோகன் தெரிவித்துள்ளார்.
யூடியூப் மூலம் ஈட்டப்படும் வருவாய்
உலக அளவில் பிரபலமான சமூக வலைதள ஊடகமாக இருக்கும் யூடியூப் மூலம் ஈட்டப்படும் வருவாய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
யூடியூப் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் முடிந்துள்ளது. இதில் உலகம் முழுவதும் 20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் யூடியூப் வாயிலாக சிறியவர் முதல் பெரியவர் என எல்லா வயதிலும் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இதன்மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய யூடியூபர்கள் 21,000 கோடி ரூபாய் வருவாயை எட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) நீல் மோகன் (Neal Mohan) கூறுகையில்,
"கடந்த 3 ஆண்டுகளில் இந்திய யூடியூப் படைப்பாளர்களுக்கு ரூ.21,000 கோடி செலுத்தியுள்ளோம். அதேவேளையில் இந்தியாவில் யூடியூபை மேலும் மேம்படுத்த ரூ. 850 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
யூடியூப் ஆசிய பசிபிக் துணைத்தலைவர்
அதேபோல், யூடியூப் ஆசிய பசிபிக் துணைத்தலைவர் கௌதம் ஆனந்த், "உள்ளடக்க உருவாக்கத்திற்கான ஒரு முக்கியமான சந்தை இந்தியா" என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், "படைப்பாளர்கள் அதிக வருவாய் ஈட்டுவதற்காக, குறிப்பாக AI மூலம் அதிநவீன கருவிகளைக் கொண்டு அதிகாரம் அளிப்பதில் யூடியூப் தொடர்ந்து உறுதியாக உள்ளது. இந்தியாவில் வணிக வாய்ப்புகள் மற்றும் பிராண்ட் ஒத்துழைப்புகளை உருவாக்க முதலீடுகள் செய்யப்படும்" என WAVES உச்சி மாநாட்டில் உறுதியளித்தார்.
நீதா அம்பானி அறிவிப்பு
அதனைத் தொடர்ந்து ஜியோஸ்டார் தலைவர் நீதா அம்பானி பேசுகையில், "இந்தியா உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றின் தாயகம் ஆகும். அதன் கலாச்சார வலிமை மீண்டும் உலகின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடப்பு செப்டம்பரில் நியூயார்க்கில் உள்ள லிங்கன் மையத்தில் நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் "India Weekend" நிகழ்ச்சியை நடத்தும்" என அறிவித்தார்.
அத்துடன் சர்வதேச பார்வையாளர்களுக்கு இந்த விழா, இந்திய கலை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும். இந்திய நாகரிகம் உண்மை, அகிம்சை மற்றும் பணிவு போன்ற மதிப்புகளால் உலகை வளப்படுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |