15 பந்துகளில் 56 ரன்.. உலகின் தலைசிறந்த வீரருக்கு இந்த நிலைமையா? யுவ்ராஜ் சிங் ஆவேசம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட் கம்மின்ஸை புறக்கணிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்து மோசமான நிலையில் உள்ளது. சிறந்த வீரர்கள் இருந்தும் அவர்களை சரிவர பயன்படுத்த அந்த அணி தவறுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. குறிப்பாக பேட் கம்மின்ஸ் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், யாரும் எதிர்பாராத விதமாக 15 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசி வெற்றியை பெற்றுத் தந்தவர் கம்மின்ஸ். அந்த போட்டியில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். ஆனால் அதன் பின்னர் விளையாடிய போட்டிகளில் அவரது பந்துவீச்சு எடுபடவில்லை.
நேற்றைய போட்டியில் விளையாடாத அவர் மைதானத்தில் அமர்ந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கம்மின்ஸை நம்பவில்லையா என்று முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், 'உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டரான பேட் கம்மின்ஸ் காயமடையாத நிலையில் அமர்ந்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. மேட்ச் வின்னர்களுக்கு 2, 3 போட்டிகள் கடினமாக இருந்தால் அவர்களை நம்புவதை நிறுத்துங்கள் என்று அர்த்தமா? அவர்களால் வரிசையாக 3 வெற்றிகளை பெற முடியும்!! இது எனது கருத்து மட்டுமே' என தெரிவித்துள்ளார்.
I’m so surprised to see @patcummins30 sit out unless he’s injured ? World class all rounder . If someone has had 2 3 tough games does it mean u stop believing in your match winners? cause they can win you 3 in a row aswell !!just my opinion ??♂️ #DCvKKR
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 28, 2022