உக்ரைன் ஜனாதிபதியிடம் சத்தமிட்ட ட்ரம்ப்: கோபத்தில் பிரித்தானியர்கள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், உலகமே பார்க்க உக்ரைன் ஜனாதிபதியை சத்தமிட்ட விடயம் பிரித்தானியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, பிரித்தானியாவுக்கு வரும்படி ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரத்து செய்யவேண்டும் என பிரித்தானிய அமைப்பு ஒன்று வற்புறுத்தியுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதியிடம் சத்தமிட்ட ட்ரம்ப்
ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, உக்ரைனின் தாதுக்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்வது தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதற்காக உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றிருந்தார்.
வெள்ளை மாளிகையில் நேற்று ஜெலன்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், துணை ஜனாதிபதி JD வேன்ஸும் சந்தித்தார்கள்.
உலகமே பார்க்க, ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது ஜெலன்ஸ்கியை அவமதிக்கும் விதத்தில் நடந்துகொண்டார்கள் இருவரும்.
ட்ரம்ப் ஜெலன்ஸ்கியைப் பார்த்து மக்களின் உயிர்களுடன் விளையாடுகிறீர்கள் என கத்த, JD வேன்ஸ் இடைமறித்துப் பேச, உங்கள் ஊர்ல் போரிட ஆண்களே இல்லை என கூற, இத்தனைக்கும் மத்தியில் ஜெலன்ஸ்கி பொறுமை காத்து கண்ணியத்துடன் நடந்துகொண்டதை உலகமே பார்த்தது.
ஆக, ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது, போர் நிலைமை என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது!
கோபத்தில் பிரித்தானியர்கள்
ஜெலன்கி வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்ட விதம் உலக நாடுகள் பலவற்றிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், ட்ரம்பை சந்திக்க அமெரிக்கா சென்றிருந்த பிரித்தானிய பிரதமர், பிரித்தானியாவும் அமெரிக்காவும் நண்பர்கள் என்று கூறியதுடன், பிரித்தானியாவுக்கு வருமாறு ட்ரம்புக்கு முறைப்படி அழைப்பும் விடுத்தார்.
ஆனால், ஜெலன்ஸ்கியை ட்ரம்ப் நடத்திய விதத்தைத் தொடர்ந்து, பிரித்தானியாவுக்கு வருமாறு ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரத்து செய்யவேண்டும் என பிரித்தானிய தரப்பிலிருந்து குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
ஸ்கொட்லாந்தின் The Scottish Greens என்னும் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பேட்ரிக் (Patrick Harvie), ட்ரம்பின் அரசு முறைப் பயணம் குறித்த திட்டங்களை பிரதமர் ஸ்டார்மர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்பை நண்பர் என்கிறார் பிரதமர். ஆனால், ஜெலன்ஸ்கியை ட்ரம்ப் நடத்திய விதத்தை பார்த்தபிறகு ட்ரம்பின் நட்பு எவ்வளவு பயங்கரமான ஒன்றாக இருக்கும் என்பதை ஸ்டார்மர் உணர்ந்திருக்கக்கூடும் என்கிறார் பேட்ரிக்.