டி20யில் 344 ரன் குவித்த அணி! 15 சிக்ஸர்களுடன் 133 ஓட்டங்கள் விளாசிய வீரர்..தூள் தூளான சாதனைகள்
காம்பியா அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டியில் ஜிம்பாப்பே அணி 290 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
சிக்கந்தர் ரஸா
நைரோபியில் டி20 உலகக்கிண்ண தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்பே, காம்பியா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ஜிம்பாப்பே அணியில் டடிவானஷி மருமனி மற்றும் பிரைன் பென்னெட் இருவரும் ருத்ர தாண்டவமாடினர்.
இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 34 பந்துகளில் 98 ஓட்டங்கள் குவித்தது. மருமனி 19 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 62 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.
அடுத்து வந்த மயேர்ஸ் 12 ஓட்டங்களில் வெளியேற, அரைசதம் அடித்த பென்னெட் 26 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார்.
அதன் பின்னர் அணித்தலைவர் சிக்கந்தர் ரஸா (Sikandar Raza) ருத்ர தாண்டவமாடினார். மறுமுனையில் ரியான் பர்ல் 25 (11) ஓட்டங்களில் வெளியேறினார்.
எனினும் ரஸாவுடன் கைகோர்த்த கிளைவ் மடன்டேவும் அதிரடியில் மிரட்ட, ஜிம்பாப்பே அணி 300 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்தது.
சிக்கந்தர் ரஸா 33 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்ததைத் தொடர்ந்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 15 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 133 ஓட்டங்கள் விளாசினார். கிளைவ் மடன்டே 17 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய காம்பியா (Gambia) அணி 54 ஓட்டங்களில் சுருண்டது. ங்கரவா, மவுட்டா தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இதன்மூலம் ஜிம்பாப்பே அணி 290 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
சாதனைகள்
ஆடவர் டி20 போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி (344) என்ற சாதனையை ஜிம்பாப்பே படைத்துள்ளது.
டி20யில் அதிக சிக்ஸர்கள் (15) விளாசிய 4வது வீரர் என்ற சாதனையை சிக்கந்தர் ரஸா படைத்தார். மேலும் இது அவருக்கு முதல் டி20 சதம் ஆகும்.
டி20யில் அதிவேக சதம் (33 பந்துகள்) விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை சிக்கந்தர் ரஸா படைத்துள்ளார்.
இப்போட்டியில் 27 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், ஜிம்பாப்பே அணி அதிக சிக்ஸர் விளாசிய அணி எனும் நேபாளின் (26) சாதனையை முறியடித்தது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |