ரத்தான விமான பயணம்... பிரேசிலிய பெண்ணை கைது செய்த சூரிச் குடிவரவு அலுவலகம்
சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்த பிரேசிலிய பெண் ஒருவர், தகவல் தெரிந்து கொள்ள சென்ற இடத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தகவல்களை மறைத்ததாக கூறி, 5 ஆண்டுகள் வரை சுவிட்சர்லாந்துக்கு திரும்ப முடியாதபடி தடை விதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் சுவிட்சர்லாந்தில் குடியிருக்கும் சகோதரி Caty மற்றும் தாயாரை சந்திக்கும் பொருட்டு, தமது 9 வயது மகளுடன் 36 வயதான Brenda சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார்.
பிப்ரவரியில் அவரது சுற்றுலா விசா காலாவதியாகும் முன்பு அவர் ரியோ டி ஜெனிரோவுக்கு திரும்பிச் செல்ல விரும்பியபோது, கொரோனா பரவல் தொடர்பாக விமான சேவைகள் ரத்தாகும் சூழல் உருவானது.
இதனால் Brenda சுவிட்சர்லாந்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், விசா பிரச்சனை ஏதும் இல்லை என்பதால், நாடு திரும்ப அவர் தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்து என்ன செய்யலாம் என்பது தொடர்பில் தகவல் கேட்டறிய சகோதரிகள் இருவரும் புதனன்று சூரிச் குடிவரவு அலுவலகம் சென்றுள்ளனர்.
ஆனால் அங்குள்ள அலுவலர்கள், மிக மோசமாக நடந்து கொண்டதுடன், Brenda சட்டவிரோதமாக சுவிஸில் தங்கி இருப்பதாக கூறி பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த பொலிசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றதுடன், உடல் முழுவதும் சோதனையிடவும் செய்துள்ளனர்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை நாடு திரும்புவதற்கான விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதை அவர்கள் முன் சமர்ப்பித்த பின்னரே, மாலையில் இருவரையும் விடுவித்துள்ளனர்.
Brenda மீது குடிவரவு அலுவலகத்தில் இருந்து புகார் அளிக்கப்பட்டால், அவருக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் இருந்து பிரேசிலுக்கு நேரடியாக செல்லும் பொருளாதார நிலை அவர்களிடம் இல்லை என்பதாலையே, போர்த்துகல் வழியாக பிரேசில் செல்ல Brenda திட்டமிட்டிருந்தார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் சூரிச் குடிவரவு அலுவலகம் மீதும் கைது செய்த பொலிசார் மீதும் கடும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.