இளைஞர்கள் பலர் அளித்த புகார்: சூரிச் மொடல் முகவரின் பகீர் பின்னணி
இளம் ஆண் மொடல்கள் அளித்த புகாரினை தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற விசாரணையின் முடிவில் மொடல் முகவர் ஒருவர் சிறை செல்ல உள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சூரிச் பகுதியில் பிரபலமான மொடல் முகவர் ஒருவர் மீது இளம் ஆண் மொடல்கள் பலர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
குறித்த முகவரின் மொபைல் தரவுகளை பரிசோதித்ததில், இளைஞர்களிடம் அவர் நிர்வாணப் புகைப்படங்கள் கோரியிருந்ததும், பதிலுக்கு மொடல் துறையில் வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட 10கும் மேற்பட்ட இளைஞர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் சூரிச் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தன் மீதான புகார்கள் அனைத்தும் போலியாக ஜோடிக்கப்பட்டவை என தெரிவித்துள்ளார்.
குறித்த மொடல் நிறுவன முகவர் சமூக ஊடகங்களை பயன்படுத்தியே இளைஞர்களை ஈர்த்துள்ளார். மேலும் அவர்களை தமது ஸ்டுடியோவுக்கு வரவழைத்து, மது குடிக்கக் கொடுத்து, பின்னர் அவர்களை நிர்வாணப்படுத்தி புகைப்படங்களை பதிவு செய்து வந்துள்ளார்.
மட்டுமின்றி, அவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கும் இரையாக்கியுள்ளார். ஆனால் தமது குற்றங்களை அந்த மொடல் முகவர் ஒப்புக்கொள்ள மறுத்ததுடன், இது அனைத்தும் ஜோடிக்கப்பட்ட புகார் என கூறி தம்மை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
மொடல் முகவர் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்துள்ள நீதிமன்றம், அந்த 34 வயது நபருக்கு நிபந்தனைகளுடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார். இருப்பினும் மேல்முறையீடு செய்து கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.