பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஒரு லட்சம் கிலோ தங்கம்: ஒரு நல்ல செய்தி
பிரித்தானியாவின் வங்கி இருப்பிலிருந்து, இந்தியாவுக்கு சொந்தமான ஒரு லட்சம் கிலோ தங்கத்தை அமைதியாக இந்தியாவுக்கு கொண்டுவந்துள்ளது ரிசர்வ் வங்கி.
இந்தியா வந்த 1 லட்சம் கிலோ தங்கம்
பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் தங்கத்திலிருந்து, 100 டன், அதாவது, 1 லட்சம் கிலோ தங்கம், பத்திரமாகவும் ரகசியமாகவும் சமீபத்தில் இந்தியாவின் பெட்டகங்களுக்கு வந்து சேர்ந்தது.
1991ஆம் ஆண்டுக்குப் பின், இந்த அளவு அதிக தங்கம், இப்போதுதான் இந்தியா வந்துள்ளது. மேலும் இந்தியாவின் பெட்டகத்துக்கு வந்து சேர்ந்த தங்கத்தின் அளவிலும் இது மிகவும் அதிகமாகும்.
இந்தியாவின் தங்க கையிருப்பில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இந்தியாவில் உள்ளது. இதர இரண்டு பங்கு தங்கம், பாங்க் ஆஃப் இங்கிலாந்து உட்பட பல்வேறு பெட்டகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு முன்பிருந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் தங்கத்தின் கையிருப்பு, இங்கிலாந்து வங்கியில் பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு வங்கியில் பராமரிக்கப்படும் பெட்டக செலவு, மற்றும் பல்வேறு வெளியிட முடியாத காரணங்களால், கணிசமான அளவு தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தனி விமானம் மற்றும் உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் 100 லட்சம் கிலோ தங்கம் இந்தியா வந்தடைந்தது.
தற்போது மும்பையிலுள்ள ரிசர்வ் வங்கியின் பழைய அலுவலக கட்டிடத்திலும், நாக்பூரில் உள்ள பெட்டகங்களிலும் இந்த தங்கம் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தரவுகளின்படி, ரிசர்வ் வங்கி 822.1 டன் தங்கத்தை தனது கையிருப்பில் வைத்துள்ளது. இதுபோக, ரிசர்வ் வங்கி தொடர்ந்து தங்கத்தைக் கொள்முதல் செய்தும் வருகிறது.
நல்ல விடயம் என்னவென்றால், இந்திய பொருளாதாரத்தின் மீள் உருவாக்கத்தின் பாதையில் பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்குத் தங்கம் கொண்டுவரப்பட்ட விடயம் ஒரு மைல் கல் ஆகும்.
இப்படி பெரிய அளவில் தங்கத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவருவது, தேசிய சொத்துக்களை பாதுகாப்பதுடன், இந்தியாவும் அதன் மத்திய வங்கியும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள இருக்கும் பொருளாதார சவால்களை சந்திக்கவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |