கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; அணியின் 10 வீராங்கனைகளும் ரிட்டயர்டு அவுட் - ஏன் தெரியுமா?
ஒரு அணியின் 10 வீராங்கனைகளும் ரிட்டயர்டு அவுட் ஆன சம்பவம் முதல்முறையாக நடைபெற்றுள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.
இந்த தொடரில் 12 அணிகள் பங்கு பெற உள்ள நிலையில், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆசிய சுற்றுக்கான போட்டியில் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் நேற்று போட்டியிட்டன.
நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணி, முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. ஐக்கிய அரபு அமீரக அணி 16 ஓவர்கள் முடிவில் 192 ஓட்டங்கள் எடுத்தது.
தொடர்ந்து 193 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கத்தார் அணி 10.1 ஓவர் முடிவில் 29 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
10 வீராங்கனைகளும் ரிட்டயர்டு அவுட்
ஐக்கிய அரபு அமீரக அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அணித்தலைவி ஈஷா ஓஷா 55 பந்துகளில் 113 ஓட்டங்கள் எடுத்தார்.
விக்கெட் கீப்பர் தீர்த்த சதிஷ் 42 பந்துகளில் 74 ஓட்டங்கள் எடுத்தார். இருவரும் 16 ஓவர் முடிவில் ரிட்டயர்டு அவுட் ஆவதாக அறிவித்தனர்.
தொடர்ந்து ஒவ்வொரு வீராங்கனையாக மைதானத்திற்கு வந்து ரிட்டயர்டு அவுட் ஆவதாக அறிவித்து விட்டு சென்றனர்.
கிரிக்கெட் வரலாற்றில், ஒரு அணியின் 10 வீராங்கனைகளும் ரிட்டயர்டு அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும்.
மழை பெய்யும் சூழல் நிலவி வந்த நிலையில், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பிரித்து வழங்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களுக்கு முன்னர், டிக்ளேர் செய்ய விதிப்படி அனுமதி இல்லாத நிலையில், வெற்றி பெரும் நோக்கில் ஐக்கிய அரபு அமீரக அணி இந்த முடிவை எடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |