மோடி ஆட்சிக்கு வந்த 15 நாட்களில் 10 பிரச்சனைகள்.., இந்திய அரசை விமர்சித்த ராகுல் காந்தி
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த 15 நாட்களில் 10 பிரச்சனைகள் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் 18-வது நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. நாடாளுமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில், புதிய உறுப்பினர்களை பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகராக பாஜகவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 8 முறை எம்பியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் கொடுக்குன்னில் சுரேஷுக்கு பதிலாக, 7 முறை எம்பியாக இருந்த மஹ்தாபுவை நியமனம் செய்ததை கண்டித்து பதவியேற்பு விழாவை இந்தியா கூட்டணி எம்பிக்கள் புறக்கணித்தனர்.
ராகுல் காந்தி விமர்சனம்
மேலும், பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
அந்தவகையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் 10 பிரச்சினைகளை பட்டியலிட்டு இந்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.
அதில், "தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் 15 நாட்கள்!
1. பயங்கரமான ரயில் விபத்து
2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள்
3. ரயில்களில் பயணிக்கும் அவல நிலை
4. நீட் ஊழல்
5. நீட் முதுகலை ரத்து
6. UGC NET தாள் கசிந்தது
7. பால், பருப்பு வகைகள், எரிவாயு, கட்டணம் மற்றும் விலை அதிகம்
8. தீயால் எரியும் காடு
9. தண்ணீர் நெருக்கடி
10. வெப்ப அலையில் ஏற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் இறப்புகள்
உளவியல் ரீதியாக நரேந்திர மோடி பின்னடைவில் இருக்கிறார், மேலும் தனது அரசாங்கத்தை காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கிறார்.
நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இந்தியாவின் வலுவான எதிர்க்கட்சி தனது அழுத்தத்தைத் தொடரும். மக்களின் குரலை எழுப்பும், பொறுப்பேற்காமல் பிரதமர் தப்பிக்க அனுமதிக்க மாட்டோம்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |