துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 10 வயது சிறுவன்: இஸ்ரேலிய படையினரின் அத்துமீறல்
காசாவில் நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 வயது சிறுவன் கொல்லப்பட்டு இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 வயது சிறுவன் உயிரிழப்பு
தெற்கு காசாவின் ராபாவில் உள்ள அல்மவாசி பகுதியில் அமைந்துள்ள தற்காலிக அகதிகள் முகாமில் இஸ்ரேலிய படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 வயதுடைய முவாதாஸ் அபு ஷார் என்ற சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிறுவனின் அத்தை பேசிய போது, அந்த சிறுவன் கையில் என்ன துப்பாக்கியா வைத்திருந்தான்? அவன் கூடாரத்திற்குள் தனியாக விளையாடி கொண்டிருந்தான். அவனுக்கு மகிழ்ச்சியாக வாழவும், விளையாடவும் உரிமை இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்ரேலிய படைகள் கடந்த சில நாட்களாக நடத்தி வரும் துப்பாக்கிச் சூட்டில் 8 முதல் 14 வயதுடைய நான்கு குழந்தைகள் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காவல் நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்
வடக்கு காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையம் மீது இஸ்ரேலிய படையினர் ட்ரோன் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த ட்ரோன் தாக்குதலில், காவல் நிலையத்தின் தலைவரான கர்னல் முகமது மர்வான் சலீம் மற்றும் சில காவல்துறை அதிகாரிகள், பெண் ஒருவர் என 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கர்னல் முகமது மர்வான் ஜபாலியா மத்திய படைப்பிரிவின் தலைவராக செயல்பட்டதாகவும், இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட காரணத்தினாலும் இந்த தாக்குதல் தவிர்க்க முடியாதது என்று இஸ்ரேல் தரப்பு விளக்கமளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |