ஜேர்மன் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு: ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
ஜேர்மனியில், ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பது தொடர்பில் கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.
ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் மசோதா
ஜேர்மன் நாடாளுமன்றத்தில், ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பது தொடர்பிலான மசோதா வாக்கெடுப்புக்கு வந்தது. மசோதாவுக்கு ஆதரவாக 323 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 272 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

ஜேர்மனியைப் பொருத்தவரை, கட்டாய ராணுவ சேவைத் திட்டம் 2011ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது.
ஆனால், உக்ரைனை ரஷ்யா ஊடுருவிய விடயம் பல ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ள நிலையில், ஜேர்மனி முதலான நாடுகள் தங்கள் ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சிகளைத் துவங்கியுள்ளன.
அவ்வகையில், ஜேர்மனியும் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது.

இப்போதைக்கு அது விருப்பமுள்ள இளைஞர்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேரும் திட்டம்தான் என கூறப்பட்டாலும், 2027 ஜூலையிலிருந்து, 18 வயதாகும் அனைத்து இளைஞர்களையும் ராணுவ சேவைக்கு உடல் தகுதியுடன் இருக்கிறார்களா என்பதை சோதிப்பதற்காக மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
அதைத் தொடர்ந்து, ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
எங்களுக்கு போர் வேண்டாம், போர் எந்த நன்மையையும் செய்யாது, அது எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கத்தான் செய்யும் என்கிறார்கள் இளைஞர்கள்.

சிலரோ, எங்கள் ஓய்வூதியத்துக்கோ, எதிர்காலத்துக்கோ அல்லது பருவநிலைக்கோ எந்த முதலீடும் இல்லை, எங்கள் தலைமுறை எதற்காக போருக்குச் செல்லவேண்டும் என்பது எங்களுக்குப் புரியவில்லை என்கிறார்கள்.
இந்நிலையில், தலைநகர் பெர்லினில் சுமார் 3,000 பேர் ராணுவ ஆள் சேர்ப்பு மசோதாவுக்கு எதிராக போராட்டங்களில் இறங்கியுள்ளார்கள்.
ஹாம்பர்க் நகரில் 1,500 பேர் போராட்டங்களில் இறங்க உள்ளதாகவும், சுமார் 90 நகரங்களில் உள்ளவர்களும் போராட்டங்களில் இணைந்துகொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |