பிரான்ஸ் கடல்பகுதியில் வீணாக கடலில் கொட்டப்பட்ட 100,000 மீன்கள்... அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம்
பிரான்ஸ் கடல்பகுதியில் 100,000 மீன்கள் கடலில் கொட்டப்பட்ட ஒரு விடயம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
திங்கட்கிழமையன்று, உணவுக்காகவும், மீன் எண்ணெய் எடுப்பது முதலான பல்வேறு விடயங்களுக்காகவும் பயன்படும் Blue whiting என்னும் மீன்கள் இலட்சக்கணக்கில் கடலில் கொட்டப்பட்டிருப்பதைக் காட்டும் வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.
விடயம் என்னெவென்றால், பெரிய படகுகளில் மீன் பிடிக்கச் செல்வோர், தங்களுக்குத் தேவையான மீன்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு மற்றவைகளை கடலில் கொட்டிவிடுவார்களாம். அந்த மீன்கள் உயிருடன் இருந்திருந்தால் இயற்கைக்கு நல்லது. அல்லது வேறு யாராவது அவற்றைப் பிடித்து வாழ்வாதாரத்துக்காக அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம்.
ஆனால், இப்படி பிடிக்கப்பட்டு, உயிரிழந்த பிறகு கடலில் கொட்டப்படும் மீன்களால் யாருக்கும் இலாபமில்லை.
அவ்வகையில், உலகின் இரண்டாவது பெரிய மீன் பிடி படகான the Margiris என்னும் படகு, மீன்களைப் பிடித்துவிட்டு, 100,000 மீன்களை கடலில் கொட்டியுள்ளது.
இந்த விடயம் சுற்றுச்சூழலியல் ஆர்வலர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
ஆனால், அது ஒரு விபத்து, வலை கிழிந்ததால் அந்த மீன்கள் கடலில் கொட்டிவிட்டன, நாங்கள் வேண்டுமென்றே மீன்களை கடலில் கொட்டவில்லை என்கிறது சம்பந்தப்பட்ட மீன் பிடி படகு தரப்பு.
இதற்கிடையில், பிரான்ஸ் கடல்வளத்துறை அமைச்சரான Annick Girardin, இலட்சக்கணக்கான மீன்கள் கடலில் கொட்டப்பட்ட அந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த விடயம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.