ஒரே நாளில் உலகளவில் ட்ரெண்ட் ஆன 11 வயது உக்ரைன் சிறுவன்! பலரின் மனதை உலுக்கிய சம்பவம்
உக்ரைனில் போர் வெடித்து வரும் நிலையில் 11 வயது சிறுவன் ஒருவர் தனியாக சுமார் 1400 கிலோ மீட்டர் வந்த சம்பவம் பலரின் மனதை உலுக்கியுள்ளது.
உக்ரைனின் Zaporizhzhia நகரில் வசித்து வரும்11 வயது சிறுவன் உக்ரைனில் இருந்து Slovakia அதாவது சுமார் 1400 கிலோ மீட்டர் தனியாக சென்றுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் 14 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை ஒவ்வொன்றாக கைப்பற்றி வருகின்றது. அதுமட்டும் இல்லாமல் உக்ரைன் நாட்டில் இன்று வரை 400 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் பயங்கரமாக போர் வெடித்து வருவதால் அந்நாட்டு மக்கள் தனது சொந்த நாட்டினை விட்டு வெளியேறி அண்டைய நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருகின்றனர். இந்நிலையில் 11 வயது சிறுவன் தனது பெற்றோரை விட்டுவிட்டு தனியாக Slovakia-வுக்கு சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உக்ரைன் உள்துறை அமைச்சகம் கூறியதாவது, சிறுவனுடைய பெற்றோர் உக்ரைனில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தனது மகனை மட்டும் இந்த பயணத்திற்கு தயார்படுத்தியுள்ளனர்.
அதோடு அவனது விபரங்கள், பாஸ்போர்ட் மற்றும் உறவினர்களின் முகவரி போன்றவற்றை ஒரு கடிதத்தில் எழுதி கொடுத்துள்ளனர்.
அதன்படி சிறுவனும் தனது பெற்றோர் கொடுத்த கடிதத்தை கையில் பிடித்தபடியே சுமார் 1400 கிலோ மீட்டர் பயணம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த சிறுவன் வைத்திருந்த கடிதத்தின் மூலம் சிறுவன் பத்திரமாக உறவினர்களிடம் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.