நாய் கூண்டில் அடைத்து மண்ணுக்குள் புதைக்கப்பட்ட 11 மாத குழந்தை: 24 மணி நேர பிறகு உயிருடன் மீட்பு
11 month old boy Found Alive in Buried Underground in us: அமெரிக்காவில் நாய் கூண்டில் அடைக்கப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்ட 11 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
மண்ணுக்குள் புதைக்கப்பட்ட 11 மாத குழந்தை
அமெரிக்காவின் சவுத் கரோலினா மாகாணத்தில் கோவா ஷார்ப்(Koah Sharpe) என்ற 11 மாத ஆண் குழந்தை நாய் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு குழுவினரால் பத்திரமாக அந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
மண்ணுக்குள் 24 மணி நேரமாக போராடிய அந்த குழந்தை செவ்வாய்க்கிழமை பிற்பகல் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச் செயல் தொடர்பாக குழந்தையின் தந்தை மைக்கேல் கோமர்(Michael Comer) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையின் தாய் திங்கட்கிழமை வெளியே சென்றிருந்த நேரத்தில் குழந்தை காணாமல் போனதை அடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் சுமார் 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
குழந்தையின் தந்தையான மைக்கேல் கோமரின் வீட்டில் இருந்து 50 யார்டு தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட மண் கிடப்பதை மீட்பு குழுவினர் கவனித்துள்ளனர்.
மேலும் மண்ணுக்கு அடியில் இருந்து குழந்தை அழும் சத்தமும் கேட்டுள்ளது.

உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை
இதையடுத்து அந்த இடத்தை உடனடியாக தோண்டி பார்த்தபோது, ஒரு துண்டால் சுற்றப்பட்டு நாய் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஷெரீப் கூன் தெரிவித்த கருத்தில், இறைவன் நிச்சயம் பேரருள் புரிந்துள்ளான். 11 மாத குழந்தை சில நிமிடங்களுக்கு முன்பு தான் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட போது கிடைத்த மகிழ்ச்சி மிகப்பெரியது என்று தெரிவித்துள்ளார்.
மிகவும் மோசமான இந்த செயலை செய்த குழந்தையின் தந்தை மீது குழந்தை கடத்தல், உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.