ரஷ்யாவின் கடல்வழி பாதையை முடக்கிய உக்ரைன்: 116 ரஷ்ய கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவின் 116 கப்பல்கள் மீது உக்ரைன் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
முடங்கிய ரஷ்யாவின் கப்பல் போக்குவரத்து
உக்ரைனின் தீவிரமான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலினால் அசோவ் கடலில் ரஷ்யாவின் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனின் எல்லைகளில் அமைந்துள்ள கெர்ச் நீரிணை வழியாக கருங்கடலுடன் இணையும் ஒரு கடல் அசோவ் ஆகும்.
இந்நிலையில் கெர்ச் நீரிணை மற்றும் அசோவ் கால்வாய் பகுதியில் உக்ரைனிய படைகள் நடத்தி வரும் தொடர் ட்ரோன் தாக்குதல் காரணமாக இந்த வழியாக செல்லும் அனைத்து ரஷ்ய கப்பல்களும் தங்கள் பயணத்தை நிறுத்தியுள்ளன.

கப்பல் போக்குவரத்து தரவுகள் மற்றும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
இலக்கு வைக்கப்பட்ட 116 ரஷ்ய கப்பல்கள்
கடந்த 9 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 116 ரஷ்ய கப்பல்கள் அசோவ் கடல் பகுதியில் உக்ரைனிய ட்ரோன்களால் தாக்கப்பட்டுள்ளன.
இந்த தகவலை உக்ரைனிய ட்ரோன் படைப்பிரிவு தளபதி ராபர்ட் ப்ரோவ்டி உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்ய கப்பல்களின் இந்த முடக்கம் காரணமாக, ரஷ்யாவின் எண்ணெய், கோதுமை, சூரியகாந்தி எண்ணெய், எஃகு ஆகியவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
கோதுமை ஏற்றுமதியில் மட்டும் 25%-ஐ இந்த வழித்தடம் வழியாக ரஷ்யா உலக நாடுகளுக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த கடல் முடக்கம் நீடித்தால் ரஷ்யாவிற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |