12 வயது பள்ளி சிறுவன் கொலை: துப்பாக்கியை கையிலெடுத்த சக மாணவன்... அரங்கேறிய சோகம்!
அமெரிக்காவின் கிரீன்வில்லில் உள்ள டாங்கிள்வுட்(Tanglewood) நடுநிலைப் பள்ளியில் பயின்றுவந்த 12 வயது சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டாங்கிள்வுட்(Tanglewood) நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்று வந்த ஜமாரி கோர்டெஸ் போனபார்டே ஜாக்சன் (12) அவருடன் பயின்றுவந்த 12 வயது கொண்ட சக மாணவனால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை மாவட்ட ஷெரிப் அலுவலகம் அங்குள்ள கிரீன்வில்லில் செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
அதில் ஜமாரி கோர்டெஸ் (12) அவரது பள்ளியில் பயின்றுவந்த 12 வயது கொண்ட சக மாணவரால் நெஞ்சில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவன் ஜமாரி கோர்டெஸ்சை துப்பாக்கியால் சூட்டுவிட்டு உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேறி அவரது வீட்டிற்கு அருகில் உள்ள அடுக்குக்கு அடியில் மறைந்து இருந்த நிலையில், சிறுவனை கைது செய்து கொலம்பியாவில் உள்ள சிறுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருப்பதாகவும், கொலைக்கான காரணத்தை சிறுவனிடம் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் சிறுவன் மீது கொலை வழக்கு, கொடூரமான குற்றத்தின் போது ஆயுதம் வைத்திருந்தது, மற்றும் 18 வயது குறைவானவர்கள் மீது கொலை ஆயுதத்தை பயன்படுத்தியது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் மதியம் 12:30 மணியளவில் நடைபெற்ற உடனடியாக, பள்ளி நிர்வாகம் அவசரகால பாதுகாப்பு அமைப்பிற்கு தகவல் தெரிவித்ததுடன், பள்ளியில் பயின்று வந்த மற்ற மாணவர்களையும் உடனடியாக சிம்சன்வில்லில் உள்ள புரூக்வுட் தேவாலயத்திற்கு மாற்றியுள்ளது.
இந்தநிலையில் கிரென்வில் கவுண்டி ஷெரிப் ஹோபர்ட் லூயிஸ் வெளியிட்ட அறிக்கையில், சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தனது இதயத்தை நொறுக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் சிறுவனின் குடும்பத்திற்கும் அவனது நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரக்கத்தையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து தொடர்ந்து அவர் மேலும் தெரிவித்த கருத்தில், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்தும், மற்றவர்களை பாதுகாப்பாக நடத்துவது குறித்தும் எடுத்துரைக்க வேண்டும், மற்றும் அவர்களது உடைமைகளில் பயங்கர ஆயுதங்களை எதுவும் வைத்து இருக்கிறார்களா என்பதை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தூக்கம் இல்லாத இரவுகள்... மாறும் பதுங்கு குழிகள்: உக்ரைன் ஜனாதிபதியின் கவலை நிலை