அண்ணனுடைய அறைக்கு சென்ற 8 வயது தங்கை கண்ட காணக்கூடாத காட்சி: குழம்பித் தவிக்கும் தந்தை
அமெரிக்காவில் தன் அண்ணனுடைய அறைக்குள் சென்ற 8 வயது தங்கை அலறியபடி வெளியே ஓடிவந்தாள்.
என்ன ஆயிற்று என பார்க்கச் சென்ற தந்தை கண்ட காட்சியை யாருமே பார்க்க விரும்பமாட்டார்கள்.
டெக்சாசிலுள்ள அந்த வீட்டிலிருந்த அறை ஒன்றில் 12 வயதேயான Hayden Hunstable தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தான்.
தங்கை Kinlee (8), அலறி சத்தமிட, தந்தை Brad, மகனை கயிற்றிலிருந்து விடுவித்து அவனுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளிக்கிறார். ஆனால் Haydenஐக் காப்பாற்ற முடியவில்லை.
அந்த சின்னஞ்சிறு குழந்தை தற்கொலை செய்துகொள்ள காரணம்? கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்குச் செல்லவோ, தன் நண்பர்களை தினமும் பார்க்கவோ முடியாமல் தவித்திருக்கிறான் Hayden.
ஆனால், அவன் சந்தோஷமாக இருந்ததாகவே கூறும் அவனது குடும்பத்தினரோ, அவன் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தான் என குழம்பித் தவிக்கிறார்கள். இந்த பாழாய்ப்போன கொரோனா எங்கள் மகனை எங்களிடமிருந்து பறித்துவிட்டது என கதறுகிறார்கள் அவர்கள்.
கால்பந்தாட்டம் என்றால் Haydenக்கு உயிர். குடும்பமே கால்பந்தாட்ட மைதானங்கள் முன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பல வெளியாகியுள்ளன.
சின்னஞ்சிறு வயதில், ஆசை ஆசையாக வளர்த்த மகனைப் பறிகொடுத்த தந்தையோ, மகன் இறந்த துக்கத்தைத் தாங்க இயலாமல் தவிக்கிறார்.
என்றாலும், தன் துக்கத்தை மற்றவர்களுக்கு நன்மையாக மாற்றுவதற்காக, மகன் நினைவாக, இனி யாருக்கும் இதுபோல் நடக்கக்கூடாது என்பதற்காக, பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மன நல பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார் அவர்.




