138 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த முதல் பெண் குழந்தை! மகிழ்ச்சியில் திளைக்கும் குடும்பம்
அமெரிக்காவில் தம்பதி ஒருவரின் குடும்பத்தில் 138 ஆண்டுகளுக்கு பிறகு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதால் ஒட்டுமொத்த குடும்பமும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
138 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த ஆண்ட்ரூ கிளார்க் மற்றும் கரோலின் கிளார்க் தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன்பு பிறந்துள்ளது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஆண்ட்ரூ கிளார்க்-கின் குடும்ப பரம்பரையில் கடந்த 1885 ஆம் ஆண்டுக்கு பிறகு பெண் குழந்தையே பிறக்காமல் இருந்த நிலையில், ஆண்ட்ரூ மற்றும் கரோலின் தம்பதிக்கு தற்போது 138 ஆண்டுகளுக்கு பிறகு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்நிலையில் நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆண்ட்ரூ குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளதால் ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் மிதந்து வருகின்றனர்.
ரகசியமாக வைத்து இருந்த நண்பர்கள்
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து ஆண்ட்ரூ பேசுகையில், எனது மனைவி இரண்டாவதாக கர்ப்பமான போது கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது, எனவே மீண்டும் கரோலின் கருத்தரித்த போது குழந்தை ஆண், பெண் என்பது பற்றியெல்லாம் நாங்கள் சிந்திக்கவில்லை.
குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்று மட்டுமே சிந்தித்தோம், ஆனால் எங்களுக்கு நடந்த குழந்தையின் பாலினத்தை கணிக்கும் விழாவில், எங்கள் நண்பர்கள் எங்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தனர்.
குழந்தையின் பாலினத்தை முன்பே அறிந்து வைத்து இருந்த எங்களது நண்பர்கள், அதை சொல்லாமல் ரகசியமாக வைத்து இருந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் நாங்கள் கடித்த குக்கீஸில் பிங்க் நிறம் இருந்ததை கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது, அதை விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை என்று தெரிவித்துள்ளார்.